கிள்ளான் போர்
கிள்ளான் போர் அல்லது சிலாங்கூர் உள்நாட்டுப் போர் (மலாய்: Perang Kelang; ஆங்கிலம்: Klang War; Selangor Civil War) என்பது மலாய் தீபகற்பத்தில் (மலேசியா) உள்ள மலாய் மாநிலமான சிலாங்கூரில் 1867 முதல் 1874 வரை நீடித்த தொடர்ச்சியான மோதல்களைக் குறிப்பிடுவதாகும்.
கிள்ளான் போர் Klang War Perang Kelang |
|||||||
---|---|---|---|---|---|---|---|
|
|||||||
பிரிவினர் | |||||||
![]() ராஜா அப்துல்லா விசுவாசிகள் ![]() பகாங் இராச்சியம் ஆய் சான் இரகசியச் சங்கம் ஆதரவு: | ![]() ராஜா மகிடி விசுவாசிகள் சுமத்திரா குழுக்கள் கீ கின் இரகசியச் சங்கம்
|
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ராஜா அப்துல்லா ராஜா இசுமாயில் தெங்கு குடின் முகமது தாகிர் யாப் ஆ லோய் | ராஜா மகிடி ராஜா மகமுட் சையட் மசூர் சோங் சோங் † |
தொடக்கத்தில் கிள்ளான் பள்ளத்தாக்கின் நிர்வாகி ராஜா அப்துல்லாவுக்கும் (Raja Abdullah) ராஜா மகிதிக்கும் (Raja Mahdi) இடையே சண்டை நடந்தது. இதில் கெடா இளவரசரான தெங்கு குடின் (Tengku Kudin) மற்றும் பிற மலாய்; மற்றும் சீனப் பிரிவுகளும் இணைந்தன.
இந்தப் போரின் இறுதியில் தெங்கு குடின்; மற்றும் ராஜா அப்துல்லாவின் மகன் ராஜா இசுமாயிலும் (Raja Ismail) வெற்றி பெற்றனர்.
பின்னணி
தொகு1854-ஆம் ஆண்டில், சிலாங்கூர் சுல்தான் சுல்தான் முகமது சா (Muhammad Shah of Selangor), ராஜா அப்துல்லா பின் ராஜா ஜாபார் (Raja Abdullah bin Raja Ja'afar) என்பவரை கிள்ளான் பள்ளத்தாக்கின் ஆளுநராக நியமித்தார். ராஜா அப்துல்லாவும் அவரின் சகோதரர் ராஜா ஜுமாத் என்பவரும்; இதற்கு முன்னர் ராஜா சுலைமான் என்பவரின் சுரங்கத் தொழிலில் ஏற்பட்ட கடனைத் தீர்க்க உதவினார்கள். அதற்குரிய நன்றிக் கடனாக அவர்களுக்கு கிள்ளான் பள்ளத்தாக்கின் ஆளுநர் பதவி வழங்கப்பட்டது.[1][2]
சுல்தான் முகமது சாவின் பேரனான ராஜா மகிதி, முன்பு கிள்ளான் பள்ளத்தாக்கின் ஆளுநராகப் பணியாற்றிய ராஜா சுலைமானின் மகன் ஆவார். ராஜா அப்துல்லா, கிள்ளான் பள்ளத்தாக்கின் ஆளுநராக நியமிகப் பட்டதால், ராஜா மகிதி அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இது ராஜா மகிதியின் கோபத்திற்கு வழிவகுத்தது.
ராஜா அப்துல்லா மற்றும் ராஜா ஜுமாத் ஆகியோர் லுக்குட்டில் (தற்போதைய போர்ட்டிக்சன், நெகிரி செம்பிலான்) ஈயச் சுரங்கங்களைத் திறந்தனர். அந்தத் ஈயச் சுரங்கங்கள் மிகவும் வெற்றிகரமாக அமைந்தன. பின்னர் 1857-ஆம் ஆண்டில், ராஜா அப்துல்லா மற்றும் ராஜா ஜுமாத் இருவரும், கோலாலம்பூருக்கு அருகில் புதிய ஈயச் சுரங்கங்களைத் திறப்பதற்கான நிதியைத் திரட்டினர். புதிய ஈயச் சுரங்கங்கள் கிள்ளான் ஆறு மற்றும் கோம்பாக் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளின் சங்கமத்தில் இருந்தன.
அதன் பின்னர் தொடங்கப்பட்ட புதிய ஈயச் சுரங்கங்கள் வெற்றிகரமாக அமைந்தன. அவை கணிசமான அலவிற்கு வருவாயை ஈட்டித் தந்தன. அந்த வகையில், வருவாயைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டமும்; அதனைச் சார்ந்துள்ள அரசியல் அதிகாரமும்; கிள்ளான் போருக்குக் காரணங்களாக அமைந்தன.[3]
சிலாங்கூர் சுல்தான் அப்துல் சமாட்
தொகு1857-ஆம் ஆண்டு சுல்தான் முகமது சா காலமானார். ஓர் அதிகாரப் போராட்டத்திற்குப் பிறகு சுல்தான் அப்துல் சமாட் (Abdul Samad of Selangor) என்பவர் சுல்தான் முகமது சாவிற்கு பிறகு ஆட்சிக்கு வந்தார்.
இருப்பினும், சுல்தான் அப்துல் சமாட் மாநிலத் தலைநகரான லங்காட் பகுதியில் மட்டுமே நேரடி கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார். சிலாங்கூரின் மற்ற பகுதிகளின் மீது சுல்தான் அப்துல் சமாட்டிற்கு முழுமையான கட்டுப்பாடுகள் இல்லை. அந்த நேரத்தில், சிலாங்கூர் மாநிலம் நான்கு ஆற்று மாநிலங்களாக ஒருங்கமைக்கப்பட்டு இருந்தன.
நான்கு தன்னாட்சித் தலைவர்கள்
தொகுஇந்த நான்கு பகுதிகளும் நான்கு தன்னாட்சித் தலைவர்கள் அல்லது ஆளுநர்களால் நிர்வகிக்கப்பட்டன.[2] பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த ராஜா மகிதிதான் முதலில் மோதலைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து நடந்த போரில் மலாய்க்காரர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தனர்.
ராஜா மகிதியின் தரப்பு
தொகுராஜா மகிதியின் பிரிவில் சிலாங்கூர் பாங்லிமா ராஜாவின் (Panglima Raja of Selangor) மகன் ராஜா மகமூத் இருந்தார். பெர்னாம் பள்ளத்தாக்கின் ராஜா ஈத்தாம் (Raja Hitam of Bernam Valley); முகமது அகிப் (Mohamed Akib); மற்றும் முகமது அகிப் அவர்களின் தம்பி முகமது தாகீர் (Mohamed Tahir) தலைமையிலான சுமாத்திரா குடியேறிகள் இருந்தனர்.
ராஜா அப்துல்லாவின் தரப்பில் அவரின் மகன் ராஜா இசுமாயில் (Raja Ismail); ராஜா அப்துல்லாவின் தரப்பிற்குத் தலைமை வகித்தார். ராஜா அப்துல்லாவின் மரணத்திற்குப் பிறகு, ராஜா இசுமாயில் போரைத் தொடர்ந்தார். பின்னர் கெடா இளவரசர் தெங்கு குடின் (Tengku Kudin), ராஜா அப்துல்லாவின் தரப்பில் சேர்ந்தார். இவருக்கு சுல்தான் அப்துல் சமாட் ஆதரவு அளித்தார். சீன ஈயச் சுரங்கத் தொழிலாளர்களும்; இரு முகாம்களுக்கு இடையே இரு பிரிவுகளாகப் பிரிந்து களம் இறங்கினர்.
இருப்பினும், போரின் போது மலாய்க்காரர்கள் சிலர் தங்களின் ஆதரவுத் தரப்புகளை மாற்றிக் கொண்டனர். எடுத்துக்காட்டாக, ராஜா அப்துல்லாவிடமிருந்து கிள்ளானைக் கைப்பற்ற ராஜா மகிதிக்கு உதவிய முகமது தாகீர், கடைசியில் தெங்கு குடினுடன் சேர்ந்து கொண்டார். அரபு-மலாய் போராளியான சையத் மசோர் (Syed Mashhor) என்பவர் தொடக்கத்தில் ராஜா அப்துல்லாவை ஆதரித்தார். ஆனால், காலப் போக்கில் ராஜா மகிதி தரப்புக்கு மாறினார். அதே போல கோலா சிலாங்கூர் ராஜா மூடா மூசா (Raja Muda Musa) என்பவர் ராஜா மகிதி தரப்பிடம் அடைக்கலம் அடைந்தார்.[4]
போரின் பிந்தைய கட்டங்களில் தெங்கு குடின் பிரித்தானிய காலனித்துவ அதிகாரிகளின் ஆதரவையும்; மற்றும் 1873-இல், அண்டை மாநிலமான பகாங்கில் இருந்து கூலிப் படையினரின் ஆதரவையும் பெற முடிந்தது.[5]
தொடக்க மோதல்
தொகு1866-ஆம் ஆண்டில், ராஜா அப்துல்லா, நீரிணைக் குடியேற்றங்களைச் சேர்ந்த இரண்டு வணிகர்களான வில்லியம் என்றி மேக்லியோட் ரீட் (William Henry Macleod Read); மற்றும் டான் கிம் சிங் (Tan Kim Ching) ஆகியோருக்கு கிள்ளான் பள்ளத்தாக்கில் அபின் வணிகத்தில் இருந்து வரி வசூலிக்க அதிகாரம் வழங்கினார். அதே காலக் கட்டத்தில் ராஜா மகிதியும் கிள்ளான் பள்ளத்தாக்கில் அபின் வணிகத்தில் ஈடுபட்டு இருந்தார்.[2]
ராஜா மகிதி சிலாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வரி வசூலை எதிர்த்தார்; மேலும் வரி செலுத்த மறுத்துவிட்டார்.[3] ராஜா அப்துல்லா இதை ராஜா மகிதி தனக்கு எதிராகச் செய்த ஓர் அத்து மீறலாகக் கருதினார்.
1857-ஆம் ஆண்டு சுல்தான் முகமது சாவின் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, சிலாங்கூர் அரியணைக்கு சுல்தான் முகமதுவின் வாரிசாக ராஜா மகிதி புறக்கணிக்கப்பட்டார். அதனால் ராஜா மகிதி தொடர்ச்சியான அதிருப்திகளை எதிர்நோக்கினார். அத்துடன், ராஜா அப்துல் சமாட் (பின்னர் சுல்தான் அப்துல் சமாட்) அடுத்த சுல்தானாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனால் ராஜா மகிதி; மற்றும் ராஜா அப்துல் சமாட் ஆகிய இருவரின் விசுவாசிகளுக்கும் இடையே மேலும் மோதல்கள் ஏற்பட்டன. இரு இளவரசர்களுக்கும் இடையே ஏற்கனவே நிலவிய பதட்டமான உறவுகள் மேலும் மோசமடைந்தன. இவையே கிள்ளான் போர் வெடிப்பதற்கான தொடக்கக் காரணங்கள் என அறியப்படுகிறது.
பூகிஸ் பிரச்சினை
தொகுஅந்த நேரத்தில், பூகிஸ் மலாய்க்காரர்களுக்கும் (Bugis Malays) (சிலாங்கூரின் அரச குடும்பம் பூகிஸ் வம்சாவளியைச் சேர்ந்தது) சுமாத்திரா வம்சாவளியைச் சேர்ந்த பத்து பாரா குலத்தினருக்கும் (Batu Bara clan) இடையே நீண்டகால பகைமை நிலவியது. பூகிஸ் இனத்தைச் சேர்ந்த ராஜா அப்துல்லா, கோலாலம்பூரில் (நவீன கோலாலம்பூர் கோபுரம் அமைந்துள்ள இடம்) புக்கிட் நானாஸைப் பாதுகாக்க அவர் அனுப்பிய பூகிஸ் இனத்தைச் சேர்ந்த சக உறுப்பினரைத் தண்டிக்க மறுத்துவிட்டார். பூகிஸ் மலாய்க்காரர் ஒருவர் பத்து பாரா குலத்தைச் சேர்ந்த ஒரு கிராமவாசியைக் கொன்று விட்டார்.
கொலைகாரனைத் தண்டிக்கவோ அல்லது பூகிஸ் மலாய்க்காரரின் மரணத்திற்கு இழப்பீடு வழங்கவோ ராஜா அப்துல்லா மறுத்ததால் கோபம் அடைந்த பத்து பாரா குலத் தலைவர் முகமது அகிப் (Mohamed Akib), இந்தச் சம்பவத்தை ராஜா மகிதியிடம் தெரிவித்தார். ராஜா அப்துல்லாவுக்கு எதிராக ராஜா மகிதி போராட விரும்பினால், ராஜா மகிதிக்கு ஆதரவு அளிப்பதாகவும் முகமது அகிப் உறுதியளித்தார்.[6]
பின்னர், சுமாத்திரா வணிகர்கள் சிலரின் ஆதரவுடன் ராஜா மகிதி, கிள்ளான் நகரக் கோட்டையை (தற்போது ராஜா மகிதி கோட்டை) முற்றுகையிட்டார். 1867-ஆம் ஆண்டு கோட்டையில் தாக்குதல் நடத்திய போது முகமது அகிப் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பின்னர், அவரின் தம்பி முகமது தாகீர் (Mohamed Tahir) பத்து பாரா குலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கொல்லப்பட்ட சுமாத்திரா மலாய்க்காரர்கள் பலரின் உடல்களும்; முகமது அகிப்பின் உடலும் கிள்ளான் நகரக் கோட்டையின் வளாகத்திற்குள் அடக்கம் செய்யப்பட்டன.
இதன் பின்னர், ராஜா அப்துல்லா தன் குடும்பத்தினருடன் மலாக்காவின் நீரிணை குடியேற்றத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் அவர் அங்கேயே இறந்தார். அவரின் இரண்டு மகன்களான ராஜா இசுமாயில்; மற்றும் ராஜா அசன் இருவரும் ராஜா மகிதியுடன் தொடர்ந்து சண்டையிட்டனர்.
மார்ச் 1867-இல், ராஜா மகிதி, கிள்ளான் கோட்டையைக் கைப்பற்றி கிள்ளான் நகரத்தையும் கைப்பற்றினார். அப்துல்லாவின் மகன்களில் ஒருவரான ராஜா இசுமாயில், கிள்ளான் நகரத்தை முற்றுகையிட மூன்று சிறிய கப்பல்களுடன் மீண்டும் கிள்ளானுக்குத் திரும்பி வந்தார். ஆனால் கிள்ளான் நகரத்தை மீண்டும் கைப்பற்ற முடியவில்லை.[3]
சீன இரகசிய கும்பல்களின் ஈடுபாடு
தொகுசிலாங்கூர் உள்நாட்டுப் போர் வெடித்தபோது, கோலாலம்பூர் காப்பித்தான் சீனா யாப் ஆ லோய் (Yap Ah Loy), சீனக் குழுக்களிடையே உள்நாட்டுச் சண்டைகளையும்; பிற மலாய் பிரிவுகளின் தாக்குதல்களையும் எதிர்கொண்டார். கோலாலம்பூரை தளமாகக் கொண்ட ஆய் சான் கும்பல் (Hai San Secret Society); மற்றும் செலாயாங்கைத் தளமாகக் கொண்ட கீ கின் கும்பல் (Ghee Hin Kongsi) ஆகிய இரண்டு பெரிய சீனக் கும்பல்கள், கோலாலம்பூரின் ஈய உற்பத்தியைக் கட்டுப்படுத்த சண்டைகளில் ஈடுபட்டன.[7][8]
சீனக் குழுக்கள் இறுதியில் சிலாங்கூர் உள்நாட்டுப் போரில் எதிரெதிர் தரப்புகளில் இணைந்தன. கீ கின் கும்பல் ராஜா மகிதியுடன் இணைந்தது; ஆய் சான் கும்பலும்; யாப் ஆ லோயும் தெங்கு குடினுடன் இணைந்தனர்.[9]
பிரித்தானியர் தலையீடு
தொகுகிள்ளானில் தொடர்ந்து நீடித்த போர்களினால் அப்பகுதியில் பிரித்தானியர்களின் வணிகம் மற்றும் முதலீடுகளுக்கு தொடர்ந்தால் போல இடையூறுகள் ஏற்பட்டன. அவை குறித்து பிரித்தானியர்கள் மிகவும் கவலைப்பட்டனர்.[10] இவற்றின் தொடர்ச்சியாக, கிள்ளான் போருக்குப் பின்னர், மலாய் மாநிலங்களின் விவகாரங்களில் பிரித்தானியர்களின் நேரடி ஈடுபாடுகளும் தொடங்கின. இறுதியில், கிள்ளான் போரில், தெங்கு குடினுடன் பிரித்தானியர்கள் இணைந்தனர்.
அதற்கும் காரணங்கள் உள்ளன. ஏற்கனவே, ராஜா மகிதியும் அவருடைய ஆதரவாளர்கள் சிலரும், மலாக்கா நீரிணையில் பிரித்தானியக் கப்பல்களைத் தாக்கிச் சேதப்படுத்தி உள்ளனர். இந்தக் கட்டத்தில், காலனித்துவச் செயலாளர் ஜேம்ஸ் பர்ச் (James W. W. Birch), தெங்கு குடினுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். கோலா சிலாங்கூரை முற்றுகையிடுவதற்கு ஒரு கப்பலையும் கொடுத்து உதவினார். அப்போதைய பகாங் மாநிலத்தின் பிரித்தானிய ஆளுநர் ஆரி ஆர்ட் (Harry Ord) அவர்களும், தெங்கு குடினுக்கு ஆதரவு வழங்கினார்.[11]
இதற்கு முன்னர், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், உள்ளூர்த் தகராறுகளில் பிரித்தானியர்கள் ஈடுபட்டிருந்தாலும், பொதுவாகவே உள்ளூர் ஆட்சியில் தலையிடாத கொள்கையைக் கொண்டிருந்தனர். இருப்பினும் கிள்ளான் போரும்; பேராக்கில் நடந்த லாருட் போர்கள் போன்ற பிற மோதல்களும், செப்டம்பர் 1873-இல், அந்தக் கொள்கையைக் கைவிடுவதற்கு வழிவகுத்தன.
பிரித்தானிய நிர்வாகம்
தொகுகிள்ளான் போர் என்பது மலாய் மாநிலங்களில் பிரித்தானிய நிர்வாகத்தின் தொடக்கமாகும்.[12] அக்டோபர் 1875-இல், சுல்தான் அப்துல் சமாட் ஆண்ட்ரூ கிளார்க்கிற்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் சிலாங்கூர் மாநிலம் ஒரு பிரித்தானிய பாதுகாவல் பிரதேசமாக மாற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதைத் தொடர்ந்து சிங்கப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞரான ஜேம்ஸ் கத்ரி டேவிட்சன் (James Guthrie Davidson) சிலாங்கூரின் முதல் பிரித்தானிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1874-ஆம் ஆண்டு பேராக் சுல்தானுடன் பங்கோர் உடன்படிக்கை 1874 கையெழுத்தான பிறகு இந்த நியமனம் உருவானது. மலாய் மாநிலங்களின் சுல்தான்களுக்கு, பிரித்தானிய ஆளுநர்கள் ஆலோசகர்களாகப் பணியாற்றும் மறைமுக பிரித்தானிய ஆட்சியின் தொடக்கத்தை இந்த நிகழ்வு குறிக்கிறது.[13]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ J.M. Gullick (1983). "Chapter 2: The State of Selangor". The Story of Kuala Lumpur, 1857-1939. Eastern Universities Press (M). pp. 8–29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9679080285.
- ↑ 2.0 2.1 2.2 Tan Ding Eing (1975). A Portrait of Malaysia and Singapore. Oxford University Press. pp. 82–85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195807226.
- ↑ 3.0 3.1 J.M. Gullick (1983). "Chapter 4: The Selangor Civil War (1867-1873)". The Story of Kuala Lumpur, 1857-1939. Eastern Universities Press (M). pp. 17–23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9679080285.
- ↑ P.L. Burns (1976). The Journals of J.W.W. Birch : First British Resident to Perak 1874-1875. Oxford University Press. p. 150.
- ↑ Leam Seng, Alan Teh (2018). "Let's learn more about one of Selangor's greatest rulers, Sultan Abdul Samad". New Straits Times. பார்க்கப்பட்ட நாள் 18 July 2023.
- ↑ "Raja Mahadi Fort (Kota Raja Mahadi)". Perpustakaan Negara Malaysia. 2000. Archived from the original on 16 November 2003. பார்க்கப்பட்ட நாள் 25 June 2009.
- ↑ "From tin town to tower city" பரணிடப்பட்டது 27 சூலை 2010 at the வந்தவழி இயந்திரம், kiat.net, Retrieved 28 September 2010
- ↑ "Kuala Lumpur History". Kuala-Lumpur.ws. பார்க்கப்பட்ட நாள் 28 September 2010.
- ↑ Jim Baker (31 July 2010). Crossroads: A Popular History of Malaysia and Singapore (2nd ed.). Marshall Cavendish International Asia Pte Ltd. pp. 124–125. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789814435482.
- ↑ Winstedt, Richard Olof (1962). A History of Malaya (in ஆங்கிலம்). Marican. pp. 217, 222.
- ↑ Tan Ding Eing (1975). A Portrait of Malaysia and Singapore. Oxford University Press. pp. 122–124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195807226.
- ↑ Andaya, B.W. (1984). A History of Malaysia. Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-312-38121-9.
- ↑ James W. Gould (1 July 1974). The United States and Malaysia. Harvard University Press. pp. 64–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0674926158.
மேலும் படிக்க
தொகு- Zainal Abidin bin Abdul Wahid; Khoo Kay Kim; Muhd Yusof bin Ibrahim; Singh, D.S. Ranjit (1994). Kurikulum Bersepadu Sekolah Menengah Sejarah Tingkatan 2. Dewan Bahasa dan Pustaka. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-62-1009-8
- 1911 Encyclopædia Britannica. Malay States.
- Haji Buyong Adil; Sejarah Johor Dewan Bahasa dan Pustaka.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் கிள்ளான் போர் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.