வணிகவாதம்
வணிகவாதம் அல்லது வாணிபவாதம் என்பது, ஒரு நாட்டின் வளம் அதன் மூலதன வழங்கலில் (supply) தங்கியுள்ளது என்றும், உலகம் தழுவிய வணிகத்தின் மொத்த அளவு "மாற்றப்பட முடியாதது" என்றும் கூறுகின்ற ஒரு பொருளியல் கோட்பாடு ஆகும். நாடுகள் சேமித்து வைத்துள்ள விலைமதிப்புள்ள உலோகப் பாளங்களினால் குறிக்கப்படும் மூலதனத்தை, மற்ற நாடுகளினுடனான வணிகச் சமநிலையை சாதகமானதாக வைத்திருப்பதன்மூலம் அதிகரித்துக் கொள்ளலாம். அரசு, இந்த நோக்கங்களை அடைவதற்காக, வரி முதலியவை மூலம், ஏற்றுமதியை ஊக்குவித்தும், இறக்குமதியை குறையச் செய்தும், பங்களிப்புச் செய்யவேண்டும் என வணிகவாதம் பரிந்துரைக்கின்றது. இத்தகைய எண்ணக்கருவின் அடிப்படையில் உருவான பொருளியல் கொள்கை வணிக முறைமை (mercantile system) எனப்படுகின்றது.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/2/29/Lorrain.seaport.jpg/300px-Lorrain.seaport.jpg)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/0/0a/AdamSmith.jpg/220px-AdamSmith.jpg)
தேசிய அரசுகளின் உருவாக்கத்தோடு ஏறத்தாளப் பொருந்தி வந்த நவீனகாலத் தொடக்கத்தின் (16 - 18 ஆம் நூற்றாண்டுகள்) முதன்மையான பொருளியல் சிந்தனைப் போக்காக வணிகவாதம் விளங்கியது. நாடுகள் மட்டத்தில், பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் அரசாங்கத் தலையீட்டுக்கும், கட்டுப்பாட்டுக்கும் இது வழிவகுத்தது. இக்காலத்திலேயே பெரும்பாலான நவீன முதலாளித்துவ முறைமைகள் நிலைபெற்றன. அனைத்துலக மட்டத்தில், வணிகவாதம், பல ஐரோப்பியப் போர்களை ஊக்கப்படுத்தியதுடன், கிடைக்கக்கூடிய சந்தை வாய்ப்புக்களுக்காக ஐரோப்பிய வல்லரசுகளைப் போட்டியிட வைத்ததன்மூலம் பேரரசுவாதத்துக்கும் தூபமிட்டது. ஆடம் சிமித் மற்றும் பிற செந்நெறிப் பொருளியலாளர்களின் வாதங்கள், பிரித்தானியப் பேரரசில் சாதகமான தாக்கத்தை உண்டாக்கியதன் காரணமாக, 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வணிகவாதத்தின் மீதிருந்த நம்பிக்கை குறையத் தொடங்கியது. இன்று அதன் முழுமையான வடிவில் வணிகவாதம் பல பொருளியலாளர்களால் கைவிடப்பட்டுவிட்டது. எனினும், இதன் சில கூறுகளைச் சாதகமாக நோக்குகின்ற பொருளியலாளர்கள் இன்றும் இருக்கவே செய்கின்றனர். இவர்களில் ரவி பத்ரா, ஈம்மொன் ஃபிங்லெட்டன், மைக்கேல் லிண்ட் என்பவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.
கோட்பாடு
தொகு1500 க்கும் 1750 க்கும் இடையில் இருந்த பொருளியலாளர் அனைவரும் இன்று பொதுவாக வணிகவாதிகள் என்றே கருதப்படுகின்றார்கள். ஆனாலும், இவர்கள் அனைவரும் தாங்கள் ஒரே குறிப்பிட்ட பொருளியல் கோட்பாட்டுக்குப் பங்களிக்கிறோம் என்று கருதவில்லை. 1763 இல் இதற்குப் பெயர் கொடுத்தவர், மார்க்கிஸ் டி மிராபெயோ (Marquis de Mirabeau) என்பவராவார். 1776 இல் ஆடம் சிமித் இதனைப் பிரபலமாக்கினார். உண்மையில், நாடுகளின் செல்வம் (The Wealth of Nations) என்னும் தனது நூலில், வணிகவாதிகளுடைய பெரும்பாலான பங்களிப்புக்களை முதன்முதலில் ஒழுங்குபடுத்தியவர் ஆடம் சிமித்தே ஆவார்.[1]
முழுமையாக நோக்கும்போது வணிகவாதம், ஒரு ஒருங்கிணைவான பொருளியல் கோட்பாடு எனக் கொள்ளமுடியாது. ஆடம் சிமித் செந்நெறிப் பொருளியலுக்குச் செய்ததுபோல, வணிகவாதிகள் எவரும் ஒர் நாட்டின் இலட்சியப் பொருளாதாரம் பற்றிய முழுமையான வணிகவாதக் கருத்துக்களை முன்வைக்கவில்லை. ஆனால், வணிகவாத எழுத்தாளர்கள் பொருளியலின் ஒரு குறிப்பிட்ட பகுதி மீதே கருத்துச் செலுத்தினர்.[2] பிற்காலத்தில் வணிகவாதிகள் அல்லாதவர்களே இவர்களது பல்வேறுபட்ட கருத்துக்களைத் தொகுத்து வணிகவாதம் என அழைத்தனர். இதனால், சில அறிஞர்கள் வணிகவாதம் என்னும் கருத்தையே முற்றாக நிராகரிக்கிறார்கள். இது வேறுவேறான விடயங்களுக்குப் போலியான ஒற்றுமைத் தோற்றத்தைக் கொடுக்கிறது என்பது இவர்களது கருத்து.[3]