மேரி செல்லி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மேரி செல்லி (மேரி ஷெல்லி, Mary Shelley, ஆகஸ்ட் 30, 1797 – பெப்ரவரி 1, 1851) ஒரு பிரித்தானிய பெண் எழுத்தாளர். புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு, நாடகங்கள் என பல இலக்கிய பாணிகள் எழுதியவர். பிராங்கென்ஸ்டைன் என்ற காத்திக் திகில் புதினத்துக்காக பரவலாக அறியப்படுகிறார். திகில் புனைவின் முன்னோடிகளில் ஒருவராகவும் கருதப்படுகிறார். தனது கணவரும் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞருமான ஷெல்லியின் படைப்புகளை தொகுத்து வெளியிட்டு அவை புகழடைய முக்கிய காரணமாகவும் விளங்கினார்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/b/b4/Mary_Wollstonecraft_Shelley_Rothwell.tif/lossy-page1-260px-Mary_Wollstonecraft_Shelley_Rothwell.tif.jpg)
அரசியல் மெய்யியலாளர் வில்லியம் காட்வின்னுக்கும், பெண்ணியவாதி மேரி வால்ஸ்டன்கிராஃப்டுக்கும் பிறந்தவர் மேரி ஷெல்லி. இவருடைய தந்தை இவருக்கு சிறு வயதில் பன்முக தாராண்மியக் கல்வியினை வழங்கினார். வில்லியம் காட்வினின் அரசியல் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களுள் ஒருவரான கவிஞர் ஷெல்லியைக் காதலித்து மணம் புரிந்தார். கணவருடன் சேர்ந்து ஐரோப்பாவில் பல இடங்களில் வாழ்ந்தார். 1818ம் ஆண்டு பெயரிலி எழுத்தாளராக தனது முதல் புதினமான பிராங்கென்ஸ்டைன் ஐ வெளியிட்டார். இப்புதினம் அறிபுனை மற்றும் திகில் புனைவு பாணிகளில் ஒரு முன்னோடியாகத் திகழுகிறது. இப்பாணிகளில் இன்றுவரை பல படைப்புகளுக்குத் தூண்டுகோலாகவும் முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது. 1822ல் கணவர் இறந்த பின்னர் இங்கிலாந்து தி்ரும்பினார். மேலும் பல புதினங்கள், வாழ்க்கை வரலாறுகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதினார். தனது 53வது வயதில் தற்கொலை செய்து கொண்டார். 1970கள் வரை பிராங்கென்ஸ்டைன் புதினத்துக்காகவும், ஷெல்லியின் கவிதைகளை பிரபலப்படுத்தியதற்காகவும் மட்டுமே மேரி இலக்கிய உலகில் அறியப்பட்டார். ஆனால் அண்மையக் காலங்களில் அவருடைய பிற இலக்கியப் படைப்புகளின் மீது இலக்கியத் திறனாய்வாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.