மழைப்பொழிவு வகைகள்

வானிலை ஆய்வில், பல்வேறு வகையான மழைப்பொழிவுகள் உள்ளன. அவை பெரும்பாலும் தரை மட்டத்திற்கு விழும் மழைப்பொழிவின் தன்மையை பொறுத்ததாக உள்ளன.

மழைப்பொழிவு நீர்ம அல்லது திட நிலைகளில் விழலாம். மழைப்பொழிவின் நீர்ம வடிவங்களில் மழை, தூறல், பனி ஆகியவை அடங்கும். மழை அல்லது தூறல் உறைந்த நிலையில் பொழியும்போது உறைபனி மழை அல்லது உறைபனி தூறல் என அறியப்படுகிறது. பனிப்பொழிவின் உறைந்த வடிவங்களில் பனி, பனிக்கட்டிகள், பனித் துகள்கள் (பனிப்பொழிவு), ஆலங்கட்டி மழை ஆகியவை அடங்கும்.[1][2][3]

வெப்பச் சலன மழை

தொகு

வெப்பச் சலன மழை என்பது சூரியக் கதிர்கள் பூமத்தியரேகைப் பகுதியில் செங்குத்தாக விழுவதால் வெப்பமான பகுதியாக உள்ளது. இதனால் காற்று விரிவடைந்து செங்குத்தாக மேலெழும்புகிறது. உயரம் செல்லச் செல்ல வெப்பநிலை படிப்படையாக குறைவதால் காற்று குளிர்ச்சியடைந்து முகில்கள் உருவாகின்றன. இந்த முகில்கள் பனி விழும் நிலையை அடையும்போது மழைப்பொழிவு உருவாகிறது. இதுவே வெப்பச் சலன மழை எனப்படுகிறது. இவ்வகையான மழைப்பொழிவு இடி மற்றும் மின்னலினைக் கொண்டிருக்கும். வழக்கமாக இம்மழைப்பொழிவானது மாலை நேரங்களில் குறிப்பாக 4 மணிக்கு வருவதால், மாலை நேர நான்கு மணி மழைப்பொழிவு (4'O Clock rain fall) என்று அழைக்கப்படுகிறது.[4]

மலைப்பகுதி மழை

தொகு

இது நில அமைப்பால் ஏற்படும் மழை எனப் பொருள்படும் ரிலிப் ரெய்ன் (Relief Rain) என்று ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது. வெப்பச் சலன முறையால் உயரவாக்கில் ஈரப்பதம் செலுத்தப்படுவதுபோல சில சமயங்களில் ஈரப்பதமும் வெப்பமும் கிடைமட்டமாகவும் பூமியின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பரிமாறப்படுகிறது. இப்பரிமாற்றம் காற்றோட்டத்தால் நடைபெறுகிறது. கிடைமட்டத்தில் காற்றோட்டம் (1) அழுத்தச் சரிவு விசை, (2) கொரியாலிஸ் விசை, (3) மைய விலக்கு விசை (4) உராய்வு விசை ஆகியவற்றால் ஏற்படுகிறது. இவ்விசைகளால் ஏற்படுகின்ற காற்றோட்டம், காற்றினை கடல், நிலம், காடுகள், மலை ஆகிய எல்லாப் பகுதிகளின் வழியாகவும் இட்டுச்செல்கின்றது. காற்றோட்டத்தின் குறுக்காக ஒரு மலைப்பகுதி இருந்தால் காற்று அந்த மலைச்சரிவின் மீது ஏறிச் செல்கிறது. இவ்வாறு ஏறுகின்ற காற்று ஈரப்பதம் நிறைந்த காற்றாக இருப்பின், அது குளிரடைந்து, மேகமாகி மழையாய்ப் பொழிகிறது. இவ்வகை மழையையே மலைப்பகுதி மழை என்கிறோம். (படம் 3)

இத்தகைய மழை பொழிய குறிப்பிட்ட மலைப்பகுதி காற்றோட்டத்தின் குறுக்காக அமையவேண்டும். இந்தியாவில் மேற்குத்தொடர்ச்சி மலைகள் தென்மேற்குப் பருவமழைக் காலக் காற்றோட்டத்திற்குக் குறுக்காக அமைந்துள்ளதால் அப்பருவத்தில் காற்று வீசும் திசையான மேற்கு திசையில், அதாவது மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் மேற்குக் கடற்கரைக்கும்  இடையில் உள்ள பகுதியில் பெருமழை பொழிகிறது. அதே சமயத்தில் மலைத்தொடரின் மறுபக்கமான கிழக்கு திசையில் மழை பொழிவதில்லை. ஏனெனில் மலையிலிருந்து கீழிறங்கும் காற்று வறண்ட காற்றாகவும் கீழிறங்கும்போது படிப்படியாக வெப்பமடைவதாலும் மழையைத் தருவதில்லை. எனவே இப்பகுதிகள் மழை மறைவுப் பகுதிகள் என அழைக்கப்படுகின்றன. மேலும் ஈரமான காற்று ஒரு குறிப்பிட்ட உயரம் வரை மேலே செல்லும்போது மட்டுமே மேகங்கள் உருவாகி மழை பொழியும். இந்த உயரம் நிலையானதல்ல. ஆயினும் பொதுவாக இது சுமார் 600 மீட்டர் ஆகும். காற்றோட்டத்தின் குறுக்கே அமையும் மலைத்தொடரின் உயரம் இதனைவிடக் குறைவாக இருந்தால் மழை மேகங்கள் உருவாக வாய்ப்பில்லை. கருங்கற் பாறைகளுக்காக மலைகளை உடைக்கும்போது இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சராசரி உயரம் 900 முதல் 1600 மீட்டர் வரை இருப்பதால் மேகங்கள் உருவாகச் சாதகமாக உள்ளது.

இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஆரவல்லி மலைத்தொடர் இதற்கு நேர்மாறானது. இம்மலைத்தொடர் தென்மேற்குப் பருவமழைக் காலக் காற்று வீசும் திசைக்கு இணையாக அமந்துள்ளது. எனவே இம்மலைப் பகுதிகளில் மழை பொழிய வாய்ப்பில்லாமல் போகிறது. மலைகள் மிக உயரமாக இருந்தால் ஈரக்காற்று மலையைத் தாண்டி மறுபக்கத்திற்கு செல்லவியலாது. இதனால் மலையின் மழை பெறும் பகுதி பசுமையாகவும் மறுபக்கம் பாலைவனமாகவும் இருக்கும். திபத்திய பீடபூமி உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள பாலைவனப் பகுதியாகும். ஏனெனில் ஈரமான காற்று இமயமலையின் தென்பகுதியில் நல்ல மழையைத் தருகிறது. அதே சமயம் இமயமலை மிக மிக உயரமான மலை என்பதால் ஈரமான காற்று மலையைத் தாண்டி மறுபுறம் செல்வதில்லை. எனவே திபத்தியப் பீடபூமி மழையற்ற பாலைவனமாக உள்ளது.

முகப்பு மழை

தொகு

இவ்வகை மழை பொதுவாக வட அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் ஆகிய பகுதிகளில் பெய்யும். இரண்டு வெவ்வேறு பண்புடைய காற்றுத் தொகுதிகள் ஒன்றோடொன்று இணைவதால் இவ்வகை மழை ஏற்படுகிறது. (படம் 4)

பருவக்காற்று மழை

தொகு

பருவக்காற்று மழை ஒரு புவியியல் அமைப்பு சார்ந்த மழையாகும். காற்றுச் சுழற்சி ஓராண்டின் வெவ்வேறு காலகட்டத்தில் மாறுவதால் இவ்வகையான மழை ஏற்படுகிறது. இவ்வகை மழை ஒரு நிலப்பகுதியில் ஏற்பட அது ஒரு பெரிய கடற்பகுதிக்கு அருகாமையில் இருக்கவேண்டும். கடற்பகுதி நிலப்பகுதியை விட வெப்பநிலை அதிகமாக உள்ள காலத்தில், அங்கிருந்து காற்று வளிமண்டலத்தின் மேலெழும்புகிறது. பின்னர் வளிமண்டலத்தின் மேல்மட்டத்தில் இடம் பெயர்ந்து நிலப்பகுதியில் இறங்குகிறது. மேலிருந்து கீழிறங்கும் காற்று மழையைத் தருவதில்லை. இக்காற்று தரைவழியே கடல் பகுதிக்குச் சென்று மீண்டும் மேலெழும்புகிறது. இவ்வாறு இக்காற்றுச் சுழற்சி ஓராண்டில் ஏறத்தாழ ஆறு மாதங்கள் நீடிக்கிறது. இக்காலம் நிலப்பகுதியின் மழையில்லா வறண்ட காலமாகும்.

ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இச்சுழற்சி அப்படியே திசை திரும்புகிறது. இச்சமயத்தில் நிலப்பகுதி வெப்பமடைந்து அப்பகுதியிலுள்ள காற்று மேலெழும்புகிறது. பின்னர் வளிமண்டலத்தின் மேல்மட்டத்தில் இடம் பெயர்ந்து கடல் பகுதியில் இறங்குகிறது. கடல் பகுதியிலிருந்து தரை வழியே நிலப்பகுதி நோக்கி வீசுகிறது. தற்போது நிலப்பகுதியில் மேலெழும்பும் காற்று கடலிலிருந்து வரும் ஈரப்பதம் மிகுந்த காற்றாகும். எனவே இது குளிரடைந்து மேகமாகி மழையைத் தருகிறது. இது பூமியின் சில பகுதிகளில் மட்டும் சில மாதங்களில் பொழியும் மழையாகும். இந்தியாவில் தென்மேற்குப் பருவக்காற்றுக் கால மழை இத்தகைய மழையாகும்.

இந்தியாவில் மழை தரும் வானிலை நிகழ்வுகள்

சனவரி, பிப்ரவரி, மார்ச்சு மாதங்களில் இந்தியாவின் வடபகுதிகளில் காஸ்பியன் கடலில் இருந்து உருவாகி கிழக்கு நோக்கி நகரும் மேற்கத்திய தொந்தரவுகளால்; (Western Disturbances) லேசான  முதல் மிதமான மழை பொழிகிறது. ஏப்ரல், மே மாதங்களில் நாட்டின் வடகிழக்கு மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் இடிமழை பொழிகிறது.

தென்மேற்குப் பருவ காலத்தில்

  • மேற்குக் கடற்கரையோரத்தில் காற்றழுத்தத் தாழ்வுநிலையாலும் (monsoon off-shore trough) குறைந்த காற்றழுத்தச் சுழலாலும்; (off-shore vortex)
  • மேற்கு வங்கம், பீஹார், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் பருவக்காற்றுக் கால தாழ்வுமண்டலங்கள், தாழ்வுப் பகுதிகளாலும் (monsoon depressions & monsoon low)
  • வடகிழக்குப் பகுதிகளில் மலைப் பகுதி மழையாலும்
  • பஞ்சாப், ஹரியானா, டில்லி, உத்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் பருவக்காற்றுத் தாழ்வுநிலையாலும் (monsoon trough)
  • குஜராத், மகராட்டிர உட்பகுதிகளில் பருவக்காற்றுக் கால மேல்மட்ட காற்றுச் சுழற்சியாலும் (Mid-tropospheric cyclonic circulation) மழை பொழிகிறது.

வடகிழக்குப் பருவ மழைக்காலத்தில் புயல்களாலும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும் ஒருவித வானிலை சார்ந்த அலைகளாலும்; (easterly waves) மழை பொழிகிறது. இக்காலத்தில் வளிமண்டலத்தில் (கீழ்மட்டத்தில்) ஏற்படும் சுழற்சி காரணமாகவும் மழை பொழிகிறது. எடுத்துக்காட்டாக வளிமண்டலத்தில் தரையிலிருந்து 0.9 கிலோமீட்டர் உயரம் வரை உள்தமிழகத்தில் ஒரு காற்றுச் சுழற்சி இருக்குமானால் (படம் 7) கடலிலிருந்து ஈரப்பதம் மிகுந்த காற்று தமிழகப் பகுதிகளிக்கு வீசுகிறது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு நல்ல மழை பொழிகிறது.

மற்றொரு எடுத்துக்காட்டாக, தென்னிந்தியப் பகுதியில் தமிழகக் கடற்கரையை ஒட்டி வங்கக்கடலிலும் கேரளக் கடற்கரையை ஒட்டி  அரபிக்கடல் பகுதியிலும் இரண்டு காற்றுச் சுழற்சிகள் தரையிலிருந்து 3.1 கிலோமீட்டர் வரை நீடித்தால் அதனால் தமிழகம், கேரளம், தென் கர்நாடகப் பகுதிகளில் மழை பொழிய வாய்ப்புள்ளது, (படம் 8)

இவ்வாறு மழை பொழிய வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காரணங்கள் உள்ளன. இக்காரணங்களை நன்குணர்ந்து மழைநீரைத் திட்டமிட்டுப் பயன்படுத்தினால் நாடு வளம் பெறும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "METAR Conversion Card". National Weather Service. பார்க்கப்பட்ட நாள் 2012-12-12.
  2. B. Geerts. Convective and stratiform rainfall in the tropics. Retrieved on 2007-11-27.
  3. Houze, Robert (October 1997). "Stratiform Precipitation in Regions of Convection: A Meteorological Paradox?". Bulletin of the American Meteorological Society 78 (10): 2179–2196. doi:10.1175/1520-0477(1997)078<2179:spiroc>2.0.co;2. பன்னாட்டுத் தர தொடர் எண்:1520-0477. Bibcode: 1997BAMS...78.2179H. 
  4. தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை, பதிப்பு 2017, ஏழாம் வகுப்பு, பருவம் 2, தொகுதி 2, பக்கம் 180
"https://ta.wiki.x.io/w/index.php?title=மழைப்பொழிவு_வகைகள்&oldid=4101744" இலிருந்து மீள்விக்கப்பட்டது