மனித விண்வெளிப்பறப்பு
மனித விண்வெளிப்பறப்பு என்பது, மனிதப் பணிக்குழுவினரும் சில சமயங்களில் பயணிகளையும் கொண்ட விண்வெளிப்பறப்புக்கள் ஆகும். இந்த இயல்பு, இயந்திரங்களால் இயக்கப்படும் விண்வெளிப்பறப்பிலிருந்தும், தொலைவில் இருந்து இயக்கப்படும் பறப்புக்களில் இருந்தும், மனித விண்வெளிப்பறப்பை வேறுபடுத்துகின்றது. தற்போதைய நிலையில் (2008), அமெரிக்க விண்வெளிப் பயணத் திட்டம், ரஷ்ய சோயூஸ் திட்டம், சீன சென்சூ திட்டம் என்பன மட்டுமே முனைப்பாக மனித விண்வெளிப்பறப்புக்களை நடத்தியுள்ளன.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/1/18/Astronaut_Edward_White_first_American_spacewalk_Gemini_4.jpg/300px-Astronaut_Edward_White_first_American_spacewalk_Gemini_4.jpg)
மனித விண்வெளிப்பறப்பின் தொடக்க முயற்சிகள்
தொகுகிறிஸ்து ஆண்டுகளின் தொடக்க காலத்தில் கிரேக்கரான லூசியான் என்பவர் விண்வெளிப்பறப்புப் பற்றிய உண்மை வரலாறுகள் (True Histories) என்னும் நூல் ஒன்றை எழுதினார். இந்நூல் சூரியனுக்கும், சந்திரனுக்கும் சென்றது பற்றிய புழுகுகளும், நம்பமுடியாத கதைகளும் கொண்ட ஒரு பயணக்கதை ஆகும். இன்று இதைக் கடந்த கால மக்களின் ஒரு கற்பனையாகப் புறந்தள்ளி விடலாம். ஆனாலும், அக்கால மக்களிடையே விண்வெளி பற்றியும், விண்வெளிப்பயணம் பற்றியும் ஆர்வத்தைத் தூண்டியது என்ற அளவில் இந் நூல் குறிப்பிடத்தக்கது ஆகும்.
1638 ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்தவ எழுத்தாளரான வில்க்கின்ஸ் என்பவர் சந்திரப் பயணம் பற்றி நூலொன்றை எழுதியதுடன், அதற்கான நான்கு வழிமுறைகள் குறித்தும் குறிப்பிட்டார். 1945 ஆம் ஆண்டில் அமெரிக்க எழுத்தாளரான ஹேர்பர்ட் எஸ், சிம் என்பவர் சீனாவில் நிலவிய பழங்கதை ஒன்று பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி சீனாவில், மிங் மரபுக் காலத்தின் தொடக்கத்தில் வாழ்ந்த அறிவியலாளரான வான் ஹூ என்பவர் வாணங்களின் உதவியுடன் விண்வெளிக்குச் செல்ல முயன்றாராம். 47 வாணங்களை ஒரு இருக்கையுடன் பிணைத்து அதில் இருந்தபடியே வாணங்களைக் கொழுத்தினாராம். புகை மண்டலத்துடன் இருக்கை மேலே கிளம்பியது. மேலே போன வான் ஹூ திரும்பவில்லை என்பது கதை.
வரலாறு
தொகுமனித வெண்வெளிப்பறப்பு 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் யூரி ககாரின் என்னும் ரஷ்யரை ஏற்றிச் சென்ற வஸ்தோக் 1 என்னும் விண்கலப் பறப்புடன் தொடங்கியது. இது சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்டது. 1963 ஜூன் 16 ஆம் நாள், சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட வஸ்தோக் 6 என்னும் இன்னொரு கலம் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்ணான வலன்டீனா தெரஸ்கோவாவை ஏற்றிச் சென்றது. இவ்விரு விண்கலங்களுமே வஸ்தோக் 3கேஏ என்னும் ஏவுகணை மூலம் ஏவப்பட்டன. சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அலெக்சி லியோனொவ் என்பவரே முதலில் விண்வெளியில் நடந்தவராவார். 1965 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள் தான் சென்ற வஸ்ஹோத் 2 என்னும் கலத்தில் இருந்து வெளியேறி இவர் இச் சாதனையை நிகழ்த்தினார். சுவெட்லானா சவீத்ஸ்கயா என்பவரே இது போன்ற சாதனையை நிகழ்த்திய முதல் பெண் ஆவார். இது 1984ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் நாள் நிகழ்ந்தது.