பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் (Pamban KumaraGurudasa Swamigal, அண். 1848-50 - மே 30, 1929) தமிழ்நாட்டில் இராமேசுவரம் என்ற ஊரில் பிறந்து வடமொழி, தமிழ்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஒரு தமிழ்த்துறவி ஆவார். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தம் பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவரியற்றிய சண்முக கவசம், பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம், குமாரஸ்தவம் போன்ற பாடல்கள் புகழ்பெற்றவை. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 அன்று சமாதி அடைந்தார். அவரது சமாதி கோவில் சென்னை, திருவான்மியூரில் உள்ளது.[1]
பாம்பன் ஸ்ரீமத் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் | |
---|---|
ஜீவ சமாதியில் வைக்கப்பட்டுள்ள பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் முழு அளவு படிமம் | |
பிறப்பு | 1848-50 இராமேசுவரம் தமிழ் நாடு இந்தியா |
இறப்பு | மே 30, 1929 (அகவை 80–81) |
இயற்பெயர் | அப்பாவு |
தத்துவம் | சைவ சித்தாந்தம் |
குரு | முருகனின் பக்தர் |
குறிப்பிடத்தக்க சீடர்(கள்) | ஸ்ரீமத் சுப்பிரமணியதாசர் சைவப் பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளை |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுபழந்தமிழ்க் குடியான அகமுடையார் இனத்தில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாகத் தோராயமாக 1848-50 ஆம் ஆண்டு இராமேசுவரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும். 1866-ஆம் ஆண்டு உள்ளூர் கிருத்துவப் பள்ளியில் பயின்றார். முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் தமிழ் கற்றார். சிறுவயதில் இவருக்கு கந்த சட்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது. சேது மாதவ அய்யர் என்பாரிடம் ஆறெழுத்து (சரவணபவ) உபதேசம் பெற்றார். அவரது ஆணையின்படி வடமொழியும் கற்கலானார். பின் அம்மொழியிலும் புலமை பெற்றார்.
தமது 12, 13 வயதிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இவருடைய முதல் பாடல் ஆசுகவியாக "கங்கையைச் சடையில் பரித்து" எனத் மங்கலத் தொடரால் தொடங்கியது. அருணகிரிநாதரை மானசீக ஞானகுருவாகவும் அருட்சாட்சியாகவும் கொண்ட இவர் தமது ஒவ்வொரு பதிகத்தையும் அருணகிரிநாதர் பெயரை வைத்தே முடிக்கலானார். பின்னாளில் ’உபய அருணகிரிநாதர்’ என்ற பெயரும் பெற்றார்.[2]
இவருக்கு அகவை 25-ஐ எட்டிய பொழுது மதுரை சின்ன கண்ணு பிள்ளை மகளாகிய காளிமுத்தம்மாளை 1878-ஆம் ஆண்டு வைகாசித் திங்களில் இராமநாதபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முருகையபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என மூன்று மகவுகள் பிறந்தனர்.
1894-ஆம் ஆண்டு இராமநாதபுரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் உள்ள ஒரு சுடுகாட்டில் சதுரக்குழி வெட்டி அதில் இறங்கி தவம் மேற்கொண்டார். 35 நாட்கள் அருந்தவம் புரிந்த நிலையில் இவருக்கு முருகப்பெருமானே இரு முனிவர்களுடன் வந்து உபதேசம் நல்கினார். இவர் முருகப் பெருமானைக் கனவிலும் நனவிலும் காணும் பேறு பெற்றவர் ஆவார். துறவுநெறி மேற்கொண்டு தாம் வாழ்ந்த ஊரான பாம்பினை விட்டு சென்னை வந்தடைந்தார். அங்கிருந்து பல தலங்களுக்குச் சமயப்பயணங்கள் மேற்கொண்டார். அப்போது அவருடன் பழகிய திரு.வி.க இவ்வாறு கூறுவார்:
"குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தபோது நாடோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வர். அவருடன் யானும் போவேன். அடிகள் வடமொழி உபநிடதக் கருத்துகளைத் தமிழில் விளக்குவார். சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடுவார்" திரு.வி.க.வாழ்க்கைக் குறிப்பு பக்கம் 127.
1923-ஆம் ஆண்டு திசம்பர் 27 அன்று சென்னை, தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, குதிரை வண்டிச் சக்கரம் இடது கணைக்கால் மீது ஏறியதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் அரசு பொதுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து நடந்த போது பாம்பன் சுவாமிகளுக்கு வயது 73 இருக்கலாம். ஆங்கிலேய மருத்துவர்களால் குணமடைவது கடினம் என்று கூறிக் கைவிடப்பட்டார். பாம்பன் சுவாமிகளின் பிரதான சீடரான ஸ்ரீ சுப்பிரமணியதாசரும், சிவசங்கர் தம்பிரானும், ஞானசாகர முதலியாரும் அவரவர் இல்லங்களில் இருந்து சுவாமிகளின் கால்முரிவு சரியாக வேண்டும் என்று சண்முக கவசத்தை தொடர்ந்து நெக்குருகப் பாடிவந்தார்கள். இவர்களில், சுப்பிரமணிய தாசர் பாடி வந்த ஒவ்வொரு சமயத்திலும், ஏரகத் தேவன் என்றாள் இருமுழங்காலும் காக்க என்ற வரிகளைக் சொல்லும் போது பாம்பன் சுவாமிகளின் கால்களை மூன்று வேல்கள் தாங்கிக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டார். இதனைச் சுவாமிகளிடத்தில் கூறி மகிழ்ந்தார். பாம்பன் சுவாமிகள் மருத்துவமனையில் இருந்த பதினொராவது நாள், இரண்டு மயில்கள் ஆகாய வெளியில் நடனமிடும் அற்புதக் காட்சியைக் கண்டார். அதன்பின்பு மற்றொரு நாள் செந்நிற குழந்தைவடிவில் முருகப் பெருமான் தமது அருகில் படுத்துக் கொண்டிருந்தக் காட்சியையும் கண்டார். இந்த அருள் நிகழ்ச்சிகளுக்கு பின் பாம்பன் சுவாமிகள் கால்முரிவு குணமாகி பூரணநலம் பெற்றார். பாம்பன் சுவாமிகள் மயில்களின் திருநடனத்தைக் கண்ட காட்சியையே மயூர சேவன விழா என ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். சென்னை அரசு மருத்துவமனையில் (இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை) "மன்றோ வார்டில்" பாம்பன் சுவாமிகளின் திருவுருவப் படம் மாட்டப்பட்டும் இந்த அற்புத நிகழ்ச்சியைப் பற்றிய பதிவுக்கல்லும் இருந்தன. இவைகளை அங்குள்ள நோயாளிகளால் வழிபடப்பட்டும் வந்தனர்.[2] ஆனால், 2024-ஆம் ஆண்டு தமிழக அரசு மருத்துவமனையைப் புதுப்பிப்பதற்காக இந்த மன்றோ வார்டு கட்டிடத்தை முழுவதுமாக இடித்துவிட்டது வருத்தத்திற்கு உரியதாகும். புதியகட்டிடம் கட்டி முடித்தப் பின் மீண்டும், பாம்பன் சுவாமிகளின் திருவுருவப் படத்தையும், பதிவுக் கல்லையும் அவ்விடத்திலேயே வைத்துவிட வேண்டும் என்பதே பாம்பன் சுவாமிகளின் அடியார்களின் கோரிக்கையாக உள்ளது.
1926-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 அன்று உயில் எழுதி மகா தேஜோ மண்டலசபை அமைப்பு நடைமுறையை ஏற்படுத்தினார்.[2]
மே 30 , 1929 அன்று காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் சென்னை ஜார்ஜ்டவுன் பகுதியில் உள்ள நம்புல் ஐயர் தெருவின் 39வது எண்ணுள்ள வீட்டில் யாவரும் அறியவே தமது சுவாசத்தை உள்ளுக்குள் இழுத்து முருகப்பெருமானுடன் சுத்த அத்துவித முத்தி அடைந்தார்கள். அடுத்த நாளான, 31.05.1929-ஆம் நாளன்று பாம்பன் சுவாமிகள் சீடர்களால் திருவான்மியூரில் சமாதிக் கோயில் அமைக்கப்பட்டது.
சுவாமிகள் இயற்றிய பாடல்கள்
தொகு- சண்முக கவசம்
- பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்
- குமரகுருதாச சுவாமிகள் பாடல் - 1266
- ஸ்ரீமத் குமாரசுவாமியம் (குமார நாயகன் திருவிளையாடல்) - 1192
- திருவலங்கற்றிரட்டு முதற்கண்டம் (இசைத்தமிழ்) & இரண்டாம் கண்டம் (பல் சந்தப் பரிமளம்) - 1135
- திருப்பா (திட்ப உரையுடன்) - 1101
- காசியாத்திரை (வடநாட்டு யாத்திரை அனுபவம்) - 608
- சிறு நூற்றிரட்டு (சண்முக கவசம் முதலிய பத்து) - 258
- சீவயாதனா வியாசம் (சீவகாருண்யம் - புலால் மறுப்பு) - 235
- பரிபூரணானந்த போதம் (சிவசூரியப் பிரகாசம் உரை) - 230
- செக்கர் வேள் செம்மாப்பு - 198
- செக்கர் வேள் இறுமாப்பு - 64
- தகராலய ரகசியம் (சதானந்த சாகர உரை)- 117
- குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி - 100
- சேந்தன் செந்தமிழ் (வடமொழி கலவாத் தனித் தமிழ்)- 50
- குமாரஸ்தவம் 44
- தென்னாட்டுத் திருத்தலதரிசனம் (கட்டளைக் கலித்துறை) 35
- பத்துப் பிரபந்தம் (சித்திரக் கவிகள்) 30
- ஆனந்தக்களிப்பு 30
- சமாதான சங்கீதம் 1
- சண்முக சகச்சிர நாமார்ச்சனை 2
ஆகப் பாடல்கள் 6666
மேற்கோள்கள்
தொகு- ↑ "சுவாமிகள் வரலாறு". Archived from the original on 2010-10-28. பார்க்கப்பட்ட நாள் 2010-12-16.
- ↑ 2.0 2.1 2.2 அமுதசுரபி தீபாவளி மலர் 2004; ஸ்ரீ பாம்பன் சுவாமிகள்; பக்கம் 150,151,152