திருப்புகழ் (அருணகிரிநாதர்)
திருப்புகழ் (Tiruppukal) என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088-இற்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழைத் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் மிகச் சிறந்த சொல்லாட்சி, இசை நுட்பங்கள், கவித்துவம், இலக்கிய நயங்கள், தாள நுட்பங்கள், சந்தபேதம், இனிய ஓசை போன்றவை அடங்கியுள்ளன. இஃது இசை நூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றது.
தொகுப்பும் பதிப்பும்
தொகு1800-களின் நடுவில் சென்னை மாகாணத்தில் பிறந்து மாவட்ட நீதிபதியாக இருந்தவர் வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளை. ஒரு சமயம் சிதம்பரத்துக்கு அவர் பயணித்துக் கொண்டிருந்தபோது, அருணகிரிநாதரின் திருப்புழைப் பயணிகள் பாடுவதைக் கேட்டு மயங்கினார்.[1] அவர் அதன் பிறகுதான் திருப்புகழ் பாடல்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். அதற்காக 1871-இல் தென்னிந்தியா முழுவதும் பயணித்துச் சுவடிகள் உள்ளிட்ட கையெழுத்துப் பிரதிகளைச் சேகரித்து, அருணகிரிநாதரின் பாடல்களை இரு தொகுதிகளாக வெளியிட்டார்.[1] அவை 1894-இல் முதற் பதிப்பும், 1901-இல் இரண்டாம் பதிப்புமாக வெளியாயின.[1]
வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளையின் மறைவுக்குப் பிறகு அவரது பணிகளை முன்னெடுத்த அவரின் மகன் வ. சு. செங்கல்வராய பிள்ளை திருப்புகழுக்கு முழுமையாக உரை எழுதி ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் வெளியிடும் பணியை மேற்கொண்டார். 1950 முதல் 1958 வரையிலான ஏழாண்டு காலம் இப்பணியில் முழுமையாக ஈடுபட்டு நூல்களை வெளியிட்டார்.[1]
புற இணைப்புகள்
தொகு- மதுரைத் திட்டம் 180,187,189,191
- கௌமாரம்(முருகனைப் பற்றிய இறையியல் கௌமாரம் எனப்படும்)
- திருப்புகழை ஒலிக்கோப்பாக இங்கு கேட்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "நூல் வெளி: எங்கும் புகழ் மணக்கும் திருப்புகழ்!". Hindu Tamil Thisai. 2023-06-10. பார்க்கப்பட்ட நாள் 2023-06-24.