திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்
இங்கிலாந்தின், கேம்பிரிட்ஜிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியே திரித்துவக் கல்லூரி ஆகும்.[1] கேம்பிரிட்ஜிலுள்ள கல்லூரிகளில் மிகப் பெரியது இதுவே. அத்துடன் ஒக்ஸ்பிரிட்ஜ் கல்லூரிகளில் அதிக நிதி வளம் கொண்டதும் இதுவேயாகும். £700 மில்லியன்களுக்கு காப்புறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இதன் கட்டிடங்களுக்குப் புறம்பாக, இதற்குரிய அறக்கொடைகளும் £700 மில்லியன்கள் வரை உள்ளதாகக் கூறப்படுகின்றது. கல்வி மற்றும் ஆய்வுத் துறைகளில் சிறப்பான சாதனைகள் புரிந்துள்ள இக் கல்லூரி, மாணவர்வீத அடிப்படையில், உலகிலேயே மிக அதிக அளவில் அறக்கொடை பெறும் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/5/55/Trinity_College_%28Cambridge%29_shield.svg/250px-Trinity_College_%28Cambridge%29_shield.svg.png)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/c/c2/TrinityCollegeCamGreatGate.jpg/250px-TrinityCollegeCamGreatGate.jpg)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/d/df/TrinityCollegeCamGreatCourt.jpg/250px-TrinityCollegeCamGreatCourt.jpg)
திரித்துவக் கல்லூரி, மிகச் சிறப்பான கல்விமரபைக் கொண்டது. இக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் முப்பத்தொரு நோபல் பரிசுகளை வென்றுள்ளார்கள். இது பெரும்பாலான நாடுகள் பெற்ற நோபல் பரிசுகளின் எண்ணிக்கையிலும் அதிகமாகும். அமெரிக்கா, ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே இதைவிடக் கூடிய எண்ணிக்கையில் நோபல் பரிசு பெற்றவர்களைக் கொண்டுள்ளன. இக் கல்லூரியைச் சார்ந்தவர்கள் பலர் மிகவும்புகழ் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களுள் ஐசாக் நியூட்டன் சிறப்பாகக் குறிபிடத்தக்கவர்.
வரலாறு
தொகுஏற்கெனவேயிருந்த, "மைக்கேல்ஹவுஸ்" மற்றும் "கிங்ஸ்ஹோல்" ஆகிய இரண்டு கல்லூரிகளை இணைத்தது மூலம் 1546 ஆம் ஆண்டில் எட்டாம் ஹென்றியால் இக்கல்லூரி நிறுவப்பட்டது. இவற்றுள் மைக்கேல்ஹவுஸ் 1324 இல் ஹார்வே டி ஸ்டண்டன் என்பவரால் நிறுவப்பட்டது. கிங்ஸ்ஹோல் 1317 இல் இரண்டாம் எட்வேர்டால் நிறுவப்பட்டு, 1337 இல் மூன்றாம் எட்வேர்டால் மீண்டும் மீளமைப்புச் செய்யப்பட்டது.
அக்காலத்தில், ஹென்றி அரசன் தேவாலயங்களுக்கும், கிறிஸ்தவ மடாலயங்களுக்கும் உரிய நிலங்களைக் கையகப்படுத்தி வந்தான். கேம்பிரிட்ஜ், ஒக்ஸ்போர்ட் ஆகிய பல்கலைக் கழகங்கள் சமய நிறுவனங்களாயும், பெரும் நிதி வளம் உள்ளவையாகவும் இருந்த காரணத்தால், இவையும் அரசால் கையகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அரசனும், எந்தக் கல்லூரியின் நிலங்களையும் கையகப்படுத்த வழிசெய்யும் சட்டமொன்றை நாடாளுமன்றத்தில் உருவாக்கினான்.
கையகப்படுத்தப்படுவதில் இருந்து தப்ப வேண்டிய நிலைக்குள்ளான பல்கலைக் கழகங்கள் இரண்டும் அரசனின் ஆறாவது மனைவியான கத்தரீன் பார் (Catherine Parr) இதைத் தடுக்க வழிசெய்யுமாறு வேண்டிக்கொண்டன. கத்தரீனின் தலையீட்டின் பேரில், பல்கலைக் கழகங்களைக் கையகப் படுத்தாது விட்டதுமன்றிப் புதிய கல்லூரியொன்றை உருவாக்கவும் அரசன் உடன்பட்டான். எனினும் அரசின் நிதியிலிருந்து இதற்குச் செலவு செய்ய விரும்பாத அரசன், முன்னர் குறிப்பிட்ட இரண்டு கல்லூரிகளையும், ஆறு தங்கும் விடுதிகளையும் இணத்துத் திரித்துவக் கல்லூரியை உருவாக்கினான். இவற்றுடன் தேவாலயங்களிடம் இருந்து நிலங்களையும் சேர்த்துக் கொண்டதனால் இது மிகப்பெரிய அளவுகொண்டதாயும், பணக்காரக் கல்லூரியாகவும் ஆனது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Walker, Timea (2022-01-21). "Trinity College". www.undergraduate.study.cam.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-02.