கொழும்புத் தமிழ்ச் சங்கம்

கொழும்புத் தமிழ்ச் சங்கம், இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் உள்ள தமிழர் பண்பாட்டு அமைப்பு. இது 1942ல் தொடங்கப்பட்டது. ஏறத்தாழ ஐம்பதினாயிரம் தமிழ் நூல்களை உள்ளடக்கிய விசாலமான நூலகம் ஒன்று இங்கு அமைந்துள்ளது.

வரலாறு

தொகு

இலங்கையின் தலைநகர் கொழும்பில் வாழ்ந்த தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் 1924 இல் தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த வெள்ளவத்தையில் "திருக்குறட் பயிற்சிக் கழகம்" என்னும் அமைப்பை நிறுவினர். சுவாமி விபுலாநந்தர், சுவாமி சங்கரசுப்பிரமணியர், சச்சிதானந்தயோகி ஆகியோர் இம்முயற்சிக்கு ஆதரவு அளித்தனர். சேர் அருணாசலம் மகாதேவா காப்பாளராகவும், இ. தம்பிராசா தலைவராகவும், மு. வயிரவப்பிள்ளை செயலாளராகவும் பொறுப்பேற்றனர். இக்கழகத்தின் மாதாந்தக் கூட்டங்கள் தலைவரின் இல்லத்திலும், ஆண்டுக் கூட்டங்கள் வெள்ளவத்தை சம்மாங்கோட்டார் கோவிலிலும் நடைபெற்றன. இக்கழகம் திருக்குறள் வகுப்பை வாரம் தோறும் நடாத்தியும், சொற்பொழிவுகளை ஒழுங்கு செய்தும், 'கலைமகள்' எனும் ஆண்டுச் சஞ்சிகையையும் வெளியிட்டு வந்தது. 1936ம் ஆண்டின் பின் இக்கழகம் வலுவற்றுப் போயிற்று.[1] எனினும் 1942 மார்ச் 22ம் திகதி "கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம்" எனும் சங்கம் நிறுவப்பட்டது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தோற்றம் இதுவேயாகும். இச்சங்கத்தின் நிறுவனத் தலைவராக முதலியார் சு. ச. பொன்னம்பலம் இருந்தார். சங்கத்தின் முதலாவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் இதன் பெயர் "கொழும்புத் தமிழ்க் கழகம்" எனப் பெயர் மாற்றம் பெற்றது. இதன் தலைவராக அ. சபாரத்தினம் இருந்தார். பின்னர் 1945 இல் இதன் பெயர் "கொழும்புத் தமிழ்ச் சங்கம்" ஆயிற்று.[1]

கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகம் 50,000 இற்கும் அதிகமான தொகுதிகளைக் கொண்ட இலங்கையிலுள்ள மிகப்பெரிய தமிழ் நூலகங்களில் ஒன்றாகும். பழந்தமிழ் இலக்கியம் பற்றிய நூல்களையும், மிக அரிதான பதிப்புக்களையும் மட்டுமல்லாது சமற்கிருத மொழி நூல்களையும் ஆங்கில நூல்களையும் கொண்டுள்ளது.

சங்கத் தலைவர்கள்

தொகு

1942 முதல் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்களாக இருந்தோர் வருமாறு:[2]

  • சு. ச. பொன்னம்பலம் முதலியார், 1942
  • அ. சபாரத்தினம், 1943-46
  • க. அருணந்தி, 1947-52
  • வே. அ. கந்தையா, 1953-54
  • க. மதியாபரணம், 1955-56
  • கா. பொ. இரத்தினம், 1957-59
  • கோ. ஆழ்வாப்பிள்ளை, 1960-62
  • மு. வைரவப்பிள்ளை, 1963-65
  • க. அருளம்பலம், 1966-68
  • கு. பாலசிங்கம், 1969-71
  • எச். டபிள்யூ. தம்பையா, 19672-74
  • மு. வைரவப்பிள்ளை, 1975-77
  • க. செ. நடராசா, 1978-80
  • பொ. சங்கரப்பிள்ளை, 1981-82
  • து. தருமராசா, 1983-84
  • நா. மாணிக்கஇடைக்காடர், 1985-85
  • வ. மு. தியாகராசா, 1987-89
  • செ. குணரத்தினம், 1990-?

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 ஓலை மார்ச் 2001
  2. "கொழும்பு தமிழ்ச் சங்கம் பொன்விழாப் போற்றிசை (1942-1992)". கொழும்புத் தமிழ்ச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 22 மே 2016.