குத்துவிளக்கு (திரைப்படம்)
குத்துவிளக்கு 1972இல் திரையிடப்பட்ட ஈழத்து தமிழ்த் திரைப்படம் ஆகும். பெரும்பாலான வெளிப்புறக்காட்சிகள் யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறையை அண்டிய பகுதிகளில் படமாக்கப்பட்டன.
குத்துவிளக்கு | |
---|---|
![]() | |
இயக்கம் | டபிள்யூ. எஸ். மகேந்திரன் |
தயாரிப்பு | வி. எஸ். துரைராஜா |
கதை | வி. எஸ். துரைராஜா |
திரைக்கதை | ஈழத்து இரத்தினம் |
இசை | ஆர். முத்துசாமி |
நடிப்பு | ஆனந்தன் ஜெயகாந்த் லீலா நாராயணன் பேரம்பலம் யோகா தில்லைநாதன் எம். எஸ். ரத்தினம் எஸ். ராம்தாஸ் சிசு. நாகேந்திரா இந்திராதேவி திருநாவுக்கரசு நடராஜன் பரமானந்த ஸ்ரீசங்கர் |
ஒளிப்பதிவு | டபிள்யூ. எஸ். மகேந்திரன் |
விநியோகம் | வீ. எஸ். ரி. பிலிம்ஸ் |
வெளியீடு | 1972 |
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
பிரபல கட்டிடக்கலை நிபுணரான வி. எஸ். துரைராஜா தயாரித்த இத்திரைப்படத்தில் இரு நாட்டியக் கலைஞர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். ஆனந்தன், லீலா நாராயணன் ஆகிய இவர்களுடன், ஜெயகாந்த், பேரம்பலம், எம். எஸ். ரத்தினம், எஸ். ராமதாஸ். சிங்கள நடிகை சாந்திலேகா முதலானோர் நடித்தார்கள். டபிள்யூ. எஸ். மகேந்திரன் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றினார். கவிஞர் ஈழத்து இரத்தினம் திரைக்கதை, வசனங்களை எழுதியதோடு இடம் பெற்ற சகல பாடல்களையும் எழுதினார். அக்காலத்தின் பிரபலமான இசையமைப்பாளரான ஆர். முத்துசாமி இசையமைத்தார். சங்கீத பூஷணம் எம். ஏ. குலசீலநாதன், மீனா மகாதேவன், ஆர். முத்துசாமி ஆகியோர் இப்பாடல்களைப் பாடினார்கள்.
கதைச் சுருக்கம்
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தின் கதை. ஏழை விவசாயியான வேலுப்பிள்ளைக்கும் (பேரம்பலம்), மனைவி லட்சுமிக்கும் (சாந்திலேகா) மூன்று பிள்ளைகள். தகப்பனுக்கு துணையாக குடும்பப்பொறுப்பை சுமக்கும் மூத்த மகன் சோமு (ஜெயகாந்த்), அவனது ஆசைத்தங்கைமார் மல்லிகா (லீலா நாராயணன்), ஜானகி (பேபி பத்மா) ஆகியோர் அடங்கிய அக்குடும்பத்தின் வாழ்க்கை துன்பங்களுடன் நகர்கிறது. அடுத்த வீட்டில் பணக்காரர் குமாரசாமி (திருநாவுக்கரசு), பணத்தையே முதன்மையாகக் கருதும் அவரது மனைவி நாகம்மா (இந்திராதேவி) - இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மகன் செல்வராஜா (ஆனந்தன்), நாகரீகச் சின்னமான மகள் ஜெயா. மல்லிகாவுக்கும், செல்வராஜாவுக்கும் காதல் ஏற்படுகிறது. ஆனால் இவர்கள் விருப்பத்துக்கு தடை போடுகிறாள், செல்வராஜாவின் தாய் நாகம்மா. கஷ்டப்பட்டு படித்து பல்கலைக்கழகம் சென்ற சோமு தன் தங்கைக்கு சீதனம் தேடுவதற்காக தன் படிப்பையும் இடையில் கைவிட்டு, தன்னையொத்த இளைஞர்களுடன் சேர்ந்து கூட்டுறவுப்பண்ணை விவசாயம் செய்து பணம் கொண்டு வருகிறான். ஆனால் இதற்கிடையில் செல்வராஜாவிற்கு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்க, சோமுவின் தங்கை மல்லிகா தற்கொலை செய்து கொள்கிறாள்.
துணுக்குகள்
தொகு- குத்துவிளக்கு படத்துக்கு பாடல் எழுதியவர் கவிஞர் ஈழத்து இரத்தினம். இவர் தமிழ்நாட்டில் வெளிவந்த எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற படத்தில் 'ஒன்றாகவே விழா கொண்டாடுவோம்' என்ற பாடலை எழுதிப் புகழ் பெற்றவர்.
- குத்து விளக்கு படத்தில் இடம்பெறும் "ஈழத்திரு நாடே" என்ற பாடல் அதில் வரும் 'ஈழம்' என்ற சொல்லுக்காக இலங்கை வானொலியினரால் தடை செய்யப்பட்டது.
உசாத்துணை
தொகு- இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை ‘குத்துவிளக்கு’ - மண் மணம் வீசிய திரைப்படம் பேசாமொழி: இதழ்-31, பங்குனி 20015
வெளியிணைப்புகள்
தொகு- குத்துவிளக்கு-1972 - யூ டுயூபு காணொளி