கலை மற்றும் தொல்லியல் மையம்

கலை மற்றும் தொல்லியல் மையம் (Center for Art and Archaeology) என்பது தெற்காசியக் கலை, தொல்லியல் ஆய்வுக்காக இந்தியாவில் அமைந்துள்ள ஒரு காப்பகமும் ஆராய்ச்சி மையமுமாகும். இது அமெரிக்க இந்திய ஆய்வுகள் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு முக்கிய மையங்களில் ஒன்றாகும். இதன் சர்வதேசத் தலைமையகம் அரியானாவின் குருகிராமில் அமைந்துள்ளது.[1]

கலை மற்றும் தொல்பொருள் மையம் 1965ஆம் ஆண்டு அமெரிக்க வாரணாசி அகாதமியாக நிறுவப்பட்டது. தெற்காசியக் கலாச்சார வரலாறு மற்றும் தொல்லியல் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கும், வருகை தரும் அறிஞர்களின் ஆராய்ச்சியை எளிதாக்குவதற்கும் இது அமைக்கப்பட்டது. இந்தியாவின் வளமான காட்சி மரபுகள் பற்றிய அறிவை வளர்ப்பதற்காக இந்த மையம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கோவில் கட்டிடக்கலை பற்றிய பல தொகுதி கலைக்களஞ்சியத்தில் மிகவும் பிரபலமானது.

இம்மையம் இலவசமாக அணுகக்கூடிய திறந்த நூலகம், புகைப்படக் காப்பகங்களைக் கொண்டுள்ளது. இங்கு 50000க்கும் மேற்பட்ட புத்தகங்கள், ஆய்விதழ்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆவணங்களின் அச்சிடப்பட்ட பதிப்புகள், வரைபடங்கள் உள்ளன. இதில் கலை, கட்டிடக்கலை, தொல்லியல், கலாச்சார வரலாறு, இந்தியவியல், மதம், அறிவியலில், வடிவமைப்பு, ஜவுளி, நிகழ்த்து கலைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அடங்கும்.

இந்த மையத்தில் தெற்காசியக் கலை மற்றும் கட்டிடக்கலையின் 150000க்கும் மேற்பட்ட நுணுக்கமாக ஆவணப்படுத்தப்பட்ட புகைப்படங்கள், நினைவுச்சின்னங்கள், தளங்கள், அருங்காட்சியக சேகரிப்புகளை உள்ளடக்கிய ஒரு புகைப்படக் காப்பகமும் உள்ளது. புகைப்படக் காப்பகத்தின் தொகுப்பு கட்டிடக்கலை, சிற்பம், சுடுமண் பொருட்கள், ஓவியங்கள், நாணயவியல் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில், இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம் உட்படப் பல்வேறு அரசு நிறுவனங்களுக்குத் தங்கள் பிராந்தியங்களின் பாரம்பரிய சேகரிப்புகளை ஆவணப்படுத்தவும், எண்ணிம மயமாக்கவும், காப்பகப்படுத்தவும் இம்மையம் உதவியுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "CAORC :: American Institute of Indian Studies". Archived from the original on 15 April 2012. பார்க்கப்பட்ட நாள் 8 December 2011.