கதா அல்-சம்மான்

சிரிய எழுத்தாளர்

கதா அல்-சம்மான் (Ghada al-Samman, பிறப்பு 1942) சிரியாவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளரும், பத்திரிக்கையாளரும் மற்றும் புதின எழுத்தாளரும் ஆவார். இவர் 1942 இல் திமிஷ்குவில் ஒரு முக்கிய மற்றும் பழமைவாத குடும்பத்தில் பிறந்தார்.[1] இவரது தந்தை அகமது அல்-சம்மான், திமிஷ்கு பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார்.[2]

கதா அல்-சம்மான்
இயற்பெயர்
غادة السمّان
பிறப்பு1942 (அகவை 82–83)
திமிஷ்கு, சிரியா.
தொழில்புதின எழுத்தாளர், பத்திரிக்கையாளர்
மொழிஅரபு, ஆங்கிலம், பிரெஞ்சு

தொழில் வாழ்க்கை

தொகு

மேற்கத்திய மற்றும் அரபு இலக்கியங்கள் மீதான இவரது தந்தையின் ஈடுபாடு இவரையும் ஆழமாக ஈர்த்தது. திமிஷ்குவின் பழமைவாத சமூகத்தில் வளர்ந்த இவர், தனது இலக்கியக் குரலை வடிவக்க கடும் சவால்களை எதிர்கொண்டார். தனது முதல் சிறுகதை புத்தகமான யுவர் ஐஸ் ஆர் மை டெஸ்டினி (Your Eyes Are My Destiny) என்ற புத்தகத்தை 1962 இல் வெளியிட்டார். இது ஓரளவு வெற்றியைப் பெற்றது. ஆரம்பத்தில், இவர் பாரம்பரிய பெண் எழுத்தாளர்களுடன் வகைப்படுத்தப்பட்டார். இருப்பினும், இவரது அடுத்தடுத்த படைப்புகள் காதல் மற்றும் பெண்பால் இலக்கியத்தின் எல்லைகளைத் தாண்டி, பரந்த சமூக, பெண்ணிய மற்றும் தத்துவ கருப்பொருள்களில் நுழைந்தன.

1963 ஆம் ஆண்டில் சிரிய பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை கலை பட்டம் பெற்றார். பின்னர் பெய்ரூத்திலுள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் நாடகத்தில் முதுகலைப் பட்டம் பெற பெய்ரூத்துக்குச் சென்றார். தனது படிப்பை முடித்த பிறகு, திமிஷ்குத் திரும்ப வேண்டாம் என்று முடிவு செய்தார். பெய்ரூத்தில் இருந்தபோது, இவர் ஒரு பத்திரிகையாளராக பணிபுரிந்தார். மேலும் 1965 ஆம் ஆண்டில்நோ சீ இன் பெய்ரூட் என்ற தனது இரண்டாவது கதைகளின் தொகுப்பை வெளியிட்டார். பின்னர் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து, ஒரு நிருபராக பணியாற்றினார். 1966 ஆம் ஆண்டில், பாரினர்ஸ் நைட் என்ற தனது மூன்றாவது கதைகளின் தொகுப்பை வெளியிட்டார்.

ஆறு நாள் போர் அவரது சமகாலத்தவர்கள் பலரைப் போலவே இவரையும் ஆழமாக பாதித்தது. ஐ கேரி மை சேம் டு லண்டன் என்ற கட்டுரைகளில் போரின் பாதிப்பு வெளிபட்டது. இதைத் தொடர்ந்து, அவர் ஆறு ஆண்டுகள் எந்த புத்தகங்களையும் வெளியிடவில்லை. அதற்கு பதிலாக பத்திரிகையில் கவனம் செலுத்தினார். இந்த காலகட்டத்தில் சமூக யதார்த்தங்களை மிகவும் நெருக்கமாக பிரதிபலித்த இவரது கட்டுரைகள் இவரது பிரபலத்தை அதிகரித்தன. இவரது பிற்கால படைப்புகளில் சிலவற்றிற்கு அவை அடித்தளமாகவும் செயல்பட்டன. 1969 ஆம் ஆண்டில், சலீம் லாஸியின் அல் ஹவாடெத் என்ற வாராந்திர செய்தி நிறுவனத்தில் ஒரு நிருபராக சேர்ந்தார்.[3]

1973 ஆம் ஆண்டில் அல்-சம்மான் தனது நான்காவது தொகுப்பான தி டிபார்ட்சர் ஆஃப் ஓல்ட் போர்ட்ஸ் என்ற தொகுப்பை வெளியிட்டார். இது சில விமர்சகர்களால் இவரது மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாக கருதப்பட்டது. அரபு அறிவுஜீவிகள் எதிர்கொள்ளும் சவால்களை இந்த சிறுகதைகளின் தொகுப்பு ஆராய்கிறது. அவர்களின் எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் இடையிலான முரண்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. இவர் பெய்ரூட் 75 என்ற தனது முதல் புதினத்தை 1974 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிட்டார். இது பெய்ரூத்தின் சிக்கலான சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது. மேலும், லெபனான் உள்நாட்டுப் போர் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு வெடித்த கொந்தளிப்பை முன்கூட்டியே எதிர்பார்த்தது.

சொந்த வாழ்க்கை

தொகு

1960 களின் பிற்பகுதியில் அல்-சம்மான் தார் அல் தலியா வெளியீட்டு நிறுவனத்தின் உரிமையாளரான பசீர் அல் தாவூக் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஆசிம் என்ற ஒரு மகன் பிறந்தார். பின்னர் அல்-சம்மான் தனது சொந்த வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார், மேலும் தனது பெரும்பாலான புத்தகங்களை மீண்டும் வெளியிட்டார். மேலும், அவர் தனது அனைத்து கட்டுரைகளையும் முடிக்கப்படாத படைப்புகள் என்ற தலைப்பில் என்ற தலைப்பில் தொகுத்தார். அல்-சம்மான் பதினைந்து புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் ஒன்பது கவிதைத் தொகுப்புளும் அடங்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "غادة السمان: أيقونة الحرية في الشعر العربي | مجلة الجرس" (in அரபிக்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.
  2. "الدمشقي العتيق… أحمد السمان | القدس العربي". 2019-04-24. Archived from the original on 2019-04-24. பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.
  3. Ghada Talhami, ed. (2012). Historical Dictionary of Women in the Middle East and North Africa. Lanham, MD: Scarecrow Press. p. 289. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-7086-4.

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=கதா_அல்-சம்மான்&oldid=4205739" இலிருந்து மீள்விக்கப்பட்டது