ஏர்லங்கா

பாலி இராச்சியத்தின் வர்மதேவ மரபு வழியின் அரசர்; காகுரிப்பான் இராச்சியத்தின் முதலும் கடைசியு

ஏர்லங்கா அல்லது ஆயர்லங்கா (ஆங்கிலம்: Airlangga அல்லது Erlangga; இந்தோனேசியம்: Rakai Halu Sri Lokeswara Dharmawangsa Airlangga Anantawikramottunggadewa) (பிறப்பு: 1002; இறப்பு: 1049) என்பவர் பாலி இராச்சியத்தின் வர்மதேவ மரபு வழியின் அரசர்; காகுரிப்பான் இராச்சியத்தின் முதலும் கடைசியுமான அரசர்; மற்றும் பாலி இராச்சியத்தின் 11-ஆவது அரசரும் ஆவார்.[1][2]

ஏர்லங்கா
Airlangga
Sri Maharaja Dharmawangsa Airlangga
Dharmawangsa Wardhana Marakatapangkaja
ஆட்சிக்காலம்? – 1042
முன்னையவர் மரகத பங்கஜன்
பின்னையவர்அனாக் உங்குஸ்
பிறப்புc. 1002
பாலி இராச்சியம்
இறப்பு1049 (அகவை 46–47)
காகுரிப்பான் இராச்சியம்
துணைவர்தர்மபிரசாத துங்காதேவி
குழந்தைகளின்
பெயர்கள்
  • பட்டத்து இளவரசி சங்கராமவிஜயா
  • கெடிரி மன்னர் சமரவிஜயன்
  • சங்கலா மன்னர் மாபஞ்சி கரசக்கன்
பட்டப் பெயர்
Çri Dharmawangsa Wardhana Marakata Pangkajastanottunggadeva
மரபுஈசான வம்சம்
தந்தைஉதயனா வருமதேவன்
தாய்குணப்பிரியா தருமபத்தினி
மதம்வைணவ சமயம்
காகுரிப்பான் இராச்சியத்தின் கெடிரி துணை இராச்சியம்
ஏர்லங்கா நினைவாக கிழக்கு ஜாவாவில் கட்டப்பட்ட 11-ஆம் நூற்றாண்டு சாடோன் கோயில்
ஏர்லங்கா ஆட்சிக் காலத்தின் பெலாகான் கோயில் இலட்சுமி சரசுவதி சிலைகள்

இவரின் ஆட்சிக்காலம் கிபி ? – 1042.[3] இவர் பாலினிய அரசர் உதயனா வருமதேவன் மற்றும் பாலினிய அரசி குணப்பிரியா தருமபத்தினி ஆகியோரின் மூத்த மகன் ஆவார்.[4]

இந்தோனேசிய வரலாற்றில், இவரின் பெயர் தனிச் சிறப்புடன் பெருமைப்படுத்தப் படுகிறது. இவரின் நினைவாக இந்தோனேசியாவில் பல இடங்களில் நினைவுகூறு இடங்கள் உள்ளன. ஜாவா சுராபாயாவில் அவரின் பெயரில் ஏர்லங்கா பல்கலைக்கழகம் (Universitas Airlangga) இயங்கி வருகிறது.[5]

மாதரம் இராச்சியம்

தொகு

உலுவாராம் இராச்சியத்தின் அரசர் உராவாரி (King Wurawari of Lwaram) என்பவரால் மாதரம் இராச்சியம் (Kingdom of Mataram) சூறையாடப்பட்ட பின்னர், அதே மாதரம் இராச்சியத்தின் ஒரு பகுதியில் இருந்து காகுரிப்பான் இராச்சியம் உருவாக்கப்பட்டது. காகுரிப்பான் இராச்சியத்தை உருவாக்கியவர் ஏர்லங்கா.

1006-ஆம் ஆண்டில், மாதரம் இராச்சியம் சூறையாடப்பட்ட பின்னர், ஏர்லங்கா படிப்படியாக உள்நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்றார். ஒரு காலத்தில் தன் மாமாவால் (மாதரம் இராச்சியத்தின் மன்னர் தருமவங்சன்) ஆளப்பட்ட மாதரம் இராச்சியத்தை மீட்டு எடுத்தார்; மேலும், ஜாவா வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களில் ஒருவராகப் பெரும் புகழையும் பெற்றார்.

காகுரிப்பான் இராச்சியம்

தொகு

ஏர்லங்கா என்றால் குதிக்கும் நீர் என்று பொருள். எனவே அவரின் பெயர் "தண்ணீரைக் கடந்தவர்" என்று பொருள்படும். அதாவது பாலி அரசவையில் பிறந்து, தன் இளமைக் காலத்தில் ஜாவாவிற்குச் செல்ல பாலி நீரிணையைக் கடந்து, பின்னர் கிழக்கு ஜாவாவில் ஓர் காகுரிப்பான் இராச்சியத்தை அமைத்து ஆட்சி செய்தார் என அவரின் வாழ்க்கைக் கதையை ஏர்லங்கா எனும் பெயர் பிரதிபலிக்கிறது.

இவர் ஈசான வம்சம் (Ishana Dynasty) மற்றும் வர்மதேவ வம்சம் (Warmadewa Dynasty) எனும் இரு அரச மரபுகளைச் சேர்ந்தவர்.

பிறப்பு

தொகு

ஜாவாவின் ஈசான வம்சம் மற்றும் பாலியின் வர்மதேவ வம்சம் ஆகிய இரு அரச மரபு வழித் திருமணத்தில் இருந்து ஏர்லாங்கா பிறந்தார். இவரின் தாயார் குணப்பிரியா தருமபத்தினி, ஈசான வம்சத்தின் இளவரசி; மாதரம் இராச்சியத்தின் மன்னர் தர்மவங்சாவின் சகோதரியும் ஆவார்.

அதே வேளையில், ஏர்லாங்காவின் தந்தை, மன்னர் உதயனா வருமதேவன் என்பவர் பாலியில் வர்மதேவா வம்சத்தின் மன்னர் ஆவார்.[6]:129–130

ஈசான வம்சம்

தொகு
 
ஏர்லங்கா காலத்தில் கட்டப்பட்ட உருவாத்தான் தீர்த்தக் கோயில்

11-ஆம் நூற்றாண்டில் பாலி இராச்சியம், மாதரம் இராச்சியத்தின் தோழமை அரசாக இருந்து இருக்கலாம்; அல்லது அடிமை அரசாக இருந்து இருக்கலாம். ஏர்லங்காவின் பெற்றோரின் திருமணம், மாதரம் இராச்சியத்தின் ஒரு பகுதியாக பாலியை அடையாளப் படுத்துவதற்கான ஓர் அரசியல் முன் ஏற்பாடாக இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.

ஏர்லங்காவுக்கு இரண்டு இளைய சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் மூத்தவர் மரகத பங்கஜன்; பின்னர் அவர்களின் தந்தை உதயனா வருமதேவனின் மரணத்திற்குப் பிறகு பாலி இராச்சியத்தின் மன்னரானார். மற்றொரு சகோதரர் அனாக் உங்குஸ். இவர் மரகத பங்கஜனின் மரணத்திற்குப் பிறகு பாலி இராச்சியத்தின் அரியணையில் ஏறியவர்.

ஏர்லங்காவால் பல்வேறு கல்வெட்டுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவற்றில் அவர் ஈசான வம்சத்தின் முப்பு சிந்தோக் (Mpu Sindok) வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று தம்முடைய அரச மரபு வழியைப்பற்றி பதிவு செய்துள்ளார்.

வரலாற்று சர்ச்சைகள்

தொகு
 
ஏர்லங்கா பல்கலைக்கழகச் சின்னம்

உதயனா வருமதேவனைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாகவே குணப்பிரியா தருமபத்தினி வேறு ஒருவரைத் திரும்ணம் செய்து கொண்டு இருக்கலாம் எனும் மாறுபாடான கருத்துகளும் உள்ளன. இதனால் ஏர்லங்கா, உதயனா வருமதேவனின் உயிரியல் முறைமையில் மகன் அல்ல; குணப்பிரியா தருமபத்தினியின் முந்தைய திருமணத்திலிருந்து பெறப் பட்டவர் எனும் வரலாற்று சர்ச்சைகள் உள்ளன.[7]

குணப்பிரியா தருமபத்தினி தம்முடைய முந்தைய கணவரைப் பிரிந்த பிறகு; அல்லது அந்தக் கணவர் மரணம் அடைந்த பிறகு; அல்லது அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு, பாலினிய மன்னர் உதயனா வருமதேவனுக்கு நிச்சயிக்கப்பட்டு இருக்கலாம்; பின்னர் தன்னுடைய மகன் ஏர்லங்காவை பாலிக்கு அழைத்துச் சென்று இருக்கலாம் என்றும் சர்ச்சைகள் உள்ளன.[8]

குணப்பிரியா தருமபத்தினி

தொகு
 
939-ஆம் ஆண்டு; மாதரம் இராச்சியத்தின் சண்டி பாரு பௌத்த ஆலயம் 2

குணப்பிரியா தருமபத்தினியின் மூத்த மகனாக ஏர்லங்கா இருந்தபோதிலும், ஏர்லங்கா, பாலியின் பட்டத்து இளவரசராகத் தேர்வு செய்யப்படவில்லை என்பதும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. ஏர்லங்காவிற்குப் பதிலாக ஆயர்லங்காவின் இளைய சகோதரர்கள் மரகத பங்கஜன்; அனாக் உங்குஸ் ஆகிய இருவரும் பட்டத்து இளவரசர்களாகத் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் பாலினிய அரியணையில் அமர்த்தப்பட்டனர். மூத்தவர் இருக்கும் போது இளையவர்கள் ஏன் முன்னிலைப் படுத்தப்பட்டனர் என்றும் சர்ச்சைகள் உள்ளன.

மேலும், ஏர்லங்காவின் பதின்ம வயதிலேயே தன் தாயார் குணப்பிரியா தருமபத்தினியால் ஜாவாவிற்குத் திருப்பி அனுப்பிப் பட்டார். இதுவும் சர்ச்சைக்குரியது. அத்துடன், பாலினிய மக்கள் தவிர்த்து வந்த துர்க்கை அம்மன் வழிப்பாட்டை குணப்பிரியா தருமபத்தினி பின்பற்றி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. பண்டைய பாலினிய மரபுகளில், துர்க்கை என்பவர் கடுமையாக விமர்சிக்கப் பட்டவர் ஆகும்.

குணப்பிரியா தருமபத்தினி, துர்க்கை மீதான பக்தியில் தீவிரம் காட்டியவர். ஜாவாவிலிருந்து பாலிக்கு துர்கா வழிபாட்டைக் கொண்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால் அவர் பலத்த எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டி இருந்தது. அத்துடன் ஏர்லங்கா, தம்முடைய அரச மரபு ஈசான வம்சத்தின் முப்பு சிந்தோக் (Mpu Sindok) வம்சாவளியைச் சார்ந்தது என்றும் கல்வெட்டுகளில் பதிவு செய்துள்ளார்.

சிறீவிஜய அரசின் மீது மாதரம் படையெடுப்பு

தொகு
 
ஏர்லங்கா தன் மகனுக்காக உருவாக்கிய ஜெங்காலா இராச்சியத்தின் நாணயங்கள்

ஏர்லங்கா பாலியில் பிறந்து வளர்ந்தார். அவரின் தாயார் குணப்பிரியா தருமபத்தினியால் ஓர் எதிர்கால ஆட்சியாளராக வளர்க்கப்பட்டார். ஏர்லங்காவிற்கு பதின்ம வயதாக இருக்கும் போது, அவரின் தாயார் அவரைக் கிழக்கு ஜாவா வட்டுகலு (Watugaluh) அரசவைக்கு அனுப்பி வைத்தார். அங்கு ஏர்லங்காவின் மாமா மன்னர் தருமவங்சாவின் ஆதரவின் கீழ் ஏர்லங்கா கூடுதலான கல்வியைப் பெற்றார். பின்னர் ஏர்லங்காவிற்கு 16 வயதாகும் போது, தர்மவங்சாவின் மகள்களில் ஒருவருடன் நிச்சயிக்கப்பட்டார்.

அந்தக் கட்டத்தில், மாதரம் இராச்சியம் ஒரு சக்திவாய்ந்த இராச்சியமாக இருந்தது. அத்துடன் பாலி இராச்சியத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டது. மேலும், மேற்கு கலிமந்தானில் ஒரு குடியேற்றத்தையும் நிறுவியது.

சிறீவிஜய பேரரசின் ஆதிக்கத்திற்குச் சவால் விடும் வகையில் மாதர இராச்சியத்தை ஒரு பிராந்தியச் சக்தியாக மாற்றி அமைக்க தர்மவங்சா விரும்பினார். 990-இல் அவர் சிறீவிஜயத்திற்கு எதிராக ஒரு கடற்படை படையெடுப்பைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து பலெம்பாங் சிறீவிஜய ஆட்சியைக் கைப்பற்றவும் முயற்சி செய்தார். இருப்பினும் மாதர இராச்சிய படையெடுப்பாளர்களை சிறீவிஜயம் எதிர்த்து நின்று வெற்றி கொண்டது.

மாதரம் வீழ்ச்சி

தொகு
 
939-ஆம் ஆண்டு; மாதரம் இராச்சியத்தின் சண்டி பாரு கோயில் 1

11-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கிழக்கு ஜாவானிய மாதரம் இராச்சியத்தின் ஈசான அரச மரபிற்கு ஏற்பட்ட ஒரு பயங்கரமான பேரழிவைப் பற்றி கி.பி 1041-ஆம் ஆண்டு கொல்கத்தா கல்வெட்டு விவரிக்கிறது. அந்தக் காலக் கட்டத்தில் சைலேந்திரா அரச மரபினரின் மாதரம் இராச்சியத்தின் அடிமை அரசாக உராவாரி (Wurawari) இருந்தது.

சுமாத்திராவில் இருந்த சிறீவிஜய பேரரசு இந்த உராவாரி அரசைக் கிளர்ச்சி செய்யத் தூண்டி விட்டது. அப்போது மாதரம் இராச்சியத்தின் தலைநகரம் கிழக்கு ஜாவா, வத்துகாலு (Watugaluh) எனும் இடத்தில் இருந்தது. வத்துகாலு அரண்மனையில் ஏர்லாங்காவின் திருமண விழாவின் போது கிளர்ச்சி நடந்தது. அந்தக் கிளர்ச்சியில் வத்துகாலு தலைநகரம் நாசமாக்கப்பட்டது.

அத்துடன் அந்தத் தாக்குதலில், மாதரம் இராச்சியத்தின் மன்னர் தருமவங்சன்; அவரின் முழு குடும்பத்தினர்; பாலி அரசர் உதயனா வருமதேவன்; மற்றும் குடிமக்களில் பலரும் கொல்லப்பட்டனர். ஏர்லங்கா, அவரின் மெய்க்காப்பாளர் நரோத்தமன் (Narottama) ஆகிய இருவரும், துறவிகள் போல மாற்று உடை அணிந்து காட்டுக்குள் தப்பிச் சென்றனர்.[9] அப்போது ஏர்லங்காவிற்கு வயது 16.[10]

சிறீவிஜய அரசர் சூலாமணி வர்மதேவன்

தொகு
 
ஏர்லங்கா காகுரிப்பான் இராச்சியத்தின் நினைவாக போகோர் மாநகரத்தில் தற்போதைய காகுரிப்பான் நினைவுச் சின்னம்

மாதரம் இராச்சியத்தின் மீதான கிளர்ச்சிக்கு, சிறீவிஜயத்தின் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். 990-ஆம் ஆண்டு பலெம்பாங்கிற்கு எதிரான தர்மவாங்சாவின் கடற்படைப் படையெடுப்பு நடந்தது. தோல்வியில் முடிந்த அந்த படையெடுப்பிற்குப் பிறகு, மாதரம் இராச்சியத்திடம் இருந்து தங்களுக்கு ஆபத்து அச்சுறுத்தல்கள் வரலாம் என்று சிறீவிஜய அரசர் செரி சூலாமணி வர்மதேவன் (Sri Culamanivarmadeva) எதிர்பார்த்தார்.

எனவே, ஒரு கிளர்ச்சியைத் தூண்டி மாதரம் இராச்சியத்தை அழிக்க சூலாமணி வர்மதேவன் திட்டமிட்டார். இந்தத் திட்டத்திற்காக உலுவார இராச்சியத்தின் மன்னர் உராவாரி (King Wurawari of Lwaram) தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜாவா சிறீவிஜயத்தின் தோழராக மன்னர் உராவாரி இருந்தார். கிளர்ச்சி நடப்பதற்கு முன்னர் உலுவார இராச்சியம், மாதரம் இராச்சியத்தின் அடிமை மாநிலமாக இருந்தது.

காகுரிப்பான் இராச்சியம் உருவாக்கம்

தொகு
 
ஏர்லங்கா உருவாக்கிய காகுரிப்பான் இராச்சியத்தின் பெனாத்தாரான் தியான பீடம்

வானகிரி மலையில் இருந்த துறவி மடத்தில் (Mount Vanagiri Hermitage), 13 ஆண்டுகள் துறவி போல ஏர்லங்கா வாழ்க்கை நடத்தினார். அதன் பிறகு 1019-ஆம் ஆண்டில், முன்னாள் ஈசான வம்சத்திற்கு விசுவாசமான அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களிடம் இருந்து ஆதரவைத் திரட்டினார்.

மாதரம் இராச்சியத்தினால் முன்பு ஆளப்பட்ட பகுதிகளை ஏர்லங்கா ஒன்றிணைக்கத் தொடங்கினார். தருமவங்சாவின் மரணத்திற்குப் பிறகு அந்தப் பகுதிகள் சிதைந்து போய் இருந்தன. ஏர்லங்கா தன் அதிகாரத்தை ஒருங்கிணைத்து ஒரு புதிய இராச்சியத்தை நிறுவினார். சிறீவிஜயாவுடன் சமாதானம் செய்து கொண்டார். ஏர்லங்கா உருவாக்கிய புதிய இராச்சியம், காகுரிப்பான் இராச்சியம் என்று அழைக்கப்பட்டது.

சிறீவிஜயத்தின் மீதான சோழர் படையெடுப்பு

தொகு

1025-ஆம் ஆண்டில், சிறீவிஜயத்தின் மீதான சோழப் படையெடுப்பிற்குப் பின்னர் சிறீவிஜயப் பேரரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதன் விளைவாக, ஏர்லாங்கா காகுரிப்பான் இராச்சியத்தின் செல்வாக்கையும் அதிகரிக்கச் செய்தார். சிறீவிஜயத்தின் மீதான சோழப் படையெடுப்பில், காகுரிப்பான் இராச்சியம் பாதிக்கப்படவில்லை.

ஏர்லாங்கா தன் மத சகிப்புத்தன்மைக்குப் பெயர் பெற்றவர்; மற்றும் இந்து-பௌத்த மதங்களின் புரவலராகவும் இருந்தார். 1035-ஆம் ஆண்டில் சிறீவிஜயா ஆசிரமம் (Srivijayasrama) என்ற பௌத்த மடத்தைக் கட்டினார். இது அவரின் மனைவியும் அரசியுமான தருமபிரசாத துங்கதேவிக்கு (Dharmaprasadottungadewi) அர்ப்பணிக்கப்பட்டது. இந்த மடாலயம் சிறீவிஜய பேரரசின் பெயரைக் கொண்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.

தருமபிரசாத துங்கதேவி

தொகு
 
கிழக்கு ஜாவா, சிதோராஜோ பூடுரான் அருங்காட்சியகத்தில் 11-ஆம் நூற்றாண்டின் ஏர்லங்கா கல்வெட்டு

ஒருவேளை அந்தப் பெயர் அவரின் மனைவியும் அரசியுமான ஸ்ரீவிஜய இளவரசி தருமபிரசாத துங்கதேவியின் பெயரைக் குறிப்பிடுகிறது. ஒருக்கால் தருமபிரசாத துங்கதேவி என்பவர் சிறீவிஜய பேரரசின் மன்னர் சங்கராம விஜயதுங்க வர்மனின் (Sangrama Vijayattunga Varman) நெருங்கிய உறவினராக இருக்கலாம் அல்லது அவரின் மகளாகக்கூட இருக்கலாம்.

தருமபிரசாத துங்கதேவியின் தந்தை சிறைபிடிக்கப்பட்ட பிறகு, சோழர்களின் தொடர் தாக்குதல்களினால் அவரின் இராச்சியம் சூறையாடப்பட்டது. அதன் பிறகு, தருமபிரசாத துங்கதேவி கிழக்கு ஜாவாவில் தஞ்சம் அடைந்தார். சிறீவிஜய இளவரசியின் துரதிர்ஷ்டவசமான நிலையைக் கண்டு ஏர்லாங்கா அனுதாபப் பட்டார்.

சோழப் படையெடுப்பின் எதிரொலி

தொகு
 
காகுரிப்பான் இராச்சியத்தின் அரசி திரிபுவன துங்கா தேவியின் நினைவுக் கல்லறை

தருமபிரசாத துங்கதேவி எனும் ஒரு பெண்மணி, தன் குடும்பத்தையும் தன் இராச்சியத்தையும் இழந்து விட்டாள் எனும் காரணமாக, ஏர்லாங்கா அவள் மீது அனுதாபப்பட்டு இருக்கலாம்; அதன் தொடர்ச்சியாக அவளை விரும்பி இருக்கலாம்; அத்துடன், சிறீவிஜயா ஆசிரமம் எனும் பௌத்த மடத்தை தருமபிரசாத துங்கதேவிக்காக அர்ப்பணித்து இருக்கலாம்; பின்னர் அவளை, காகுரிப்பான் அரசியாகவும் தன் மனைவியாகவும் ஏற்றுக் கொண்டு இருக்கலாம். இது பொதுப்படையான கருத்து.

சோழர்களின் படையெடுப்பால், சிறீவிஜயத்தின் வீழ்ச்சி என்பது ஏர்லங்காவுக்கு அவரின் காகுரிப்பான் இராச்சியத்தைப் பலப்படுத்த வாய்ப்பளித்தது. அந்தக் கட்டத்தில் அவருக்கு எந்த ஒரு வெளிநாட்டுத் தலையீடும்; உள்நாட்டு இடையூறுகளும் இல்லை. பின்னர், அவர் தன் இராச்சியத்தை மத்திய ஜாவா மற்றும் பாலி வரை விரிவுபடுத்தினார். ஜாவாவின் வடக்கு கடற்கரை, குறிப்பாக சுராபாயா (Surabaya), துபான் (Tuban), போன்ற நகரங்கள் முக்கியமான வணிக மையங்களாக மாறின.

கல்வெட்டுகள்

தொகு
 
மஜபாகித் பேரரசின் சார்பாக காகுரிப்பான் இராச்சியத்தின் அரசி திரிபுவன துங்கா தேவி எனும் கீதார்ஜா

ஜாவா முழுவதும் அவரைப் பற்றிய தொல்பொருள் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. ஏர்லங்கா, இலக்கியத்தின் தீவிர புரவலராகவும் இருந்துள்ளர் என்றும் அறியப்படுகிறது. 1035-ஆம் ஆண்டில், கவிஞர் முப்பு கன்வா (Mpu Kanwa) என்பவர் அர்ச்சுனா விவாகா (Arjunawiwaha) எனும் காவியத்தை இயற்றினார். இந்தக் காவியம் மகாபாரத காவியத்தில் இருந்து தழுவி எடுக்கப்பட்டது. இந்தக் காவியம் அருச்சுனனின் கதையைச் சொல்கிறது.[6]:145–147

ஒருவகையில், அது ஏர்லங்காவின் சொந்த வாழ்க்கையைத் தழுவியது போலவும் உள்ளது. பெனாங்கோங்கான் மலையில் (Mount Penanggungan) உள்ள பெலகான் கோயிலில் (Belahan Temple) அவரைப் பற்றிய ஒரு கற்சிலை உள்ளது. அங்கு அவர் கருடனின் மீது விஷ்ணுவாக சித்தரிக்கப்பட்டுள்ளார்.[10]

கெலஜென் கல்வெட்டு

தொகு

1037-ஆம் ஆண்டில் காகுரிப்பான் இராச்சியத்தின் தலைநகரம் வாத்தான் மாஸ் (Watan Mas) எனும் இடத்தில் இருந்து காகுரிப்பான் எனும் இடத்திற்கு மாற்றப்பட்டது. ஏர்லங்கா தன்னுடைய மிக விசுவாசமான மக்களுக்கும் நண்பர்களுக்கும் பட்டங்களை வழங்கி சிறப்பு செய்துள்ளார். தன் மெய்க்காப்பாளர் நரோத்தமா என்பவருக்கு, பிரதமர் பதவியை வழங்கினார். மற்றொரு நண்பர் நித்தி என்பவருக்குத் துணை பிரதமராகப் பதவி உயர்வு வழங்கினார். இது கி.பி 1037 தேதியிட்ட கெலஜென் கல்வெட்டில் (Kelagen inscription) பதிவாகி உள்ளது. ஏர்லாங்காவும் வேளாண் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.[11]

இன்றைய ஜோம்பாங் குறுமாநிலத்தில் (Jombang Regency) அமைந்துள்ள ரிங்கின் சப்தா அணையைக் (Wringin Sapta Dam) கட்டினார். அதன் மூலம் ஒரு பெரிய நீர்ப்பாசனத் திட்டத்தையும் தொடங்கினார். பிரந்தாஸ் ஆற்றில் ஓர் அணையைக் கட்டியதன் மூலம், சுற்றியுள்ள நெல் வயல்களுக்கு நீர்ப்பாசனம் வழங்கினார்; மற்றும் அப்பகுதியில் ஒரு நீரியல் அமைப்பையும் பராமரித்தார்.[11]

வாழ்க்கையின் முடிவு

தொகு
 
ஏர்லங்கா ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட ரிங்கின் சப்தா அணை; மற்றும் நீர்ப்பாசனத் திட்டத்தின் நினைவாக கட்டப்பட்ட உருவுத்தான் தீர்த்த ஆலயத்தின் ஒரு பகுதி.

தன் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில், ஏர்லங்கா வாரிசு உரிமைப் பிரச்சினையை எதிர்கொண்டார். அவரின் நேரடி வாரிசான பட்டத்து இளவரசி சங்கராம விஜயா (Sangramawijaya), ஏர்லங்காவுக்குப் பிறகு அரசியாக ஆட்சி செய்வதற்குப் பதிலாக பிக்குணி பௌத்த துறவியாக மாற முடிவு செய்தார்.

பட்டத்து இளவரசி சங்க்ராமவிஜயா, ராணி தர்மபிரசாதோத்துங்கதேவியின் மகள். பட்டத்து இளவரசி சங்கராம விஜயா அரியணையைத் துறந்ததால், அவளுடைய இரண்டு இளைய சகோதரர்கள் அடுத்தடுத்து வாரிசு வரிசையில் இருந்தனர். இருவரும் சமமான வாரிசு உரிமையுள்ளவர்கள்; மற்றும் இருவரும் அரியணையில் அமர்வதற்குப் போட்டியிட்டனர்.

ஏர்லங்காவின் துறவி வாழ்க்கை

தொகு

1045-ஆம் ஆண்டில், ஏர்லங்கா காகுரிப்பான் இராச்சியத்தை இரண்டு இராச்சியங்களாகப் பிரித்தார். அவரின் இரண்டு மகன்களான ஜங்கலா (Janggala) மற்றும் கெடிரி (Kediri) ஆகியோருக்கு அந்த இரண்டு இராச்சியங்களும் வழங்கப்பட்டன. ஏர்லங்காவின் இரண்டு மகன்களும் அரியணைக்குச் சமமான உரிமையுள்ளவர்கள் என்பதால் உள்நாட்டுப் போரைத் தவிர்ப்பதற்காக இராச்சியப் பிரிவினை செய்யப்பட்டது.

ஏர்லாங்கா 1045-இல் அரியணையைத் துறந்து துறவி வாழ்க்கையை ஏற்றுக் கொண்டார். அவரின் புதிய பெயர் ரிசி அஜி பதுக்கா முப்புங்கு சாங் பினாக்கா கத்ரானிங் புவானா (Resi Aji Paduka Mpungku Sang Pinaka Catraning Bhuwana). ஏர்லாங்கா 1049-இல் மரணம் அடைந்தார். அவரின் அஸ்தி, பெனாங்கோங்கான் மலையின் கிழக்குச் சரிவுகளில் உள்ள பெலாகான் தீர்த்தக் கோயிலில் (Belahan Tirtha) கரைக்கப்பட்டது.[6]:146

காட்சியகம்

தொகு
  • ஏர்லங்கா தொடர்பான காட்சிப் படங்கள்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Nigel Bullough and Peter Carey (2016) "The Kolkata (Calcutta) Stone", IIAS Newsletter, 74, p. 5.
  2. John N. Miksic and Geok Yian Goh (2016) Ancient Southeast Asia. Routledge, p. 417
  3. Marwati Djoened Poesponegoro, Nugroho Notosusanto: Sejarah nasional Indonesia: untuk SMP. Departemen Pendidikan dan Kebudayaan, 1984
  4. Phalgunadi, I. Gusti Putu (1991). Evolution of Hindu Culture in Bali: From the Earliest Period to the Present Time. Sundeep Prakashan. pp. 50–51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185067650.
  5. "Home UNAIR - MERR (C) Campus Mulyorejo – Surabaya". Universitas Airlangga Official Website. பார்க்கப்பட்ட நாள் 18 January 2025.
  6. 6.0 6.1 6.2 Cœdès, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824803681.
  7. "Airlangga is thought to have been the product of a prior marriage that ended with Queen Mahendradatta becoming a divorced or widowed". The Bali Retirement Villages. பார்க்கப்பட்ட நாள் 18 January 2025.
  8. "Mahendradatta - However, there is a speculation suggesting that Mahendradatta was probably already married prior to Udayana". Fate Series Roleplay | aminoapps.com. பார்க்கப்பட்ட நாள் 18 January 2025.
  9. Jan Hendrik Peters, Tri Hita Karana
  10. 10.0 10.1 Mojopahihat kings : Airlangga. EastJava.com.
  11. 11.0 11.1 M. Habib Mustopo (2007). Sejarah: Untuk kelas 2 SMA (in Indonesian). Yudhistira. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789796767076. பார்க்கப்பட்ட நாள் 25 March 2013.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)

சான்றுகள்

தொகு
முன்னர் பாலி அரசர்கள்
ஏர்லங்கா
 ? – 1042
பின்னர்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=ஏர்லங்கா&oldid=4191912" இலிருந்து மீள்விக்கப்பட்டது