எண்ணுப் பெயர்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எண்ணிக்கையைக் குறிப்பதற்குப் பயன்படும் பெயர்ச் சொற்கள் எண்ணுப் பெயர்கள் எனப்படுகின்றன. தமிழ் மொழியில் உள்ள எண்ணுப் பெயர்களை முழு எண்ணுப்பெயர்கள், பின்னங்கள், கலப்பு எண்ணுப்பெயர்கள் என மூன்று வகையாகப் பகுக்கலாம் எனத் தற்காலத் தமிழ் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
முழு எண்ணுப் பெயர்கள்
தொகுமுழு எண்ணுப் பெயர்கள் ஒன்று தொடக்கம் மேல் நோக்கி அமைகின்ற முழு எண்களைக் குறிக்கும் பெயர்களாகும், ஒன்று, எட்டு, பத்து, நாற்பது, ஐம்பத்தைந்து, நூறு, ஆயிரம், இலட்சம், கோடி என்பன முழு எண்ணுப் பெயர்களுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். முதல் எட்டு முழு எண்ணுப் பெயர்களுக்கும் பெயரடை வடிவங்கள் உள்ளன. இவை பின்வருமாறு அமைகின்றன.
முழு எண்ணுப் பெயர் | பெயரடை வடிவம் |
---|---|
ஒன்று | ஒரு, ஓர் |
இரண்டு | இரு, ஈர் |
மூன்று | மூ |
நான்கு | நால் |
ஐந்து | ஐ |
ஆறு | அறு |
ஏழு | எழு |
எட்டு | எண் |
பத்துக்கு மேற்பட்ட முழு எண்ணுப் பெயர்கள் கூட்டல் முறை, பெருக்கல் முறை, இரண்டும் கலந்த முறை ஆகிய மூன்று முறைகளில் உருவாகின்றன. கீழே தரப்பட்டுள்ளவை இவற்றுக்கான சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.
- பதினாறு - பத்து + ஆறு - (கூட்டல் முறை)
- எழுபது - ஏழு x பத்து - (பெருக்கல் முறை)
- எண்பத்தைந்து - (எட்டு x பத்து) + ஐந்து - (கலப்பு முறை)