எச்சம் (இலக்கணம்)
தமிழில் சொல்லோ சொல்லின் பொருளோ முழுமை பெறாமல் குறைந்து நிற்பதை இலக்கணம் எச்சம் என்னும் சொல்லால் தமிழ் இலக்கணம் குறிப்பிடுகிறது. எச்சத்துக்குத் தொல்காப்பியம் தரும் குறியீடு 'எஞ்சுபொருட்கிளவி' எனபதாகும். பொருள் எஞ்சிய, அதாவது, சொல்லாமற் குறைபட்ட, பொருளைக் குறிக்கும் சொல் என்பது இதன் விளக்கம். இதனைத் தொல்காப்பியம் பத்து வகையாகப் பகுத்துக் காட்டுகிறது.[1]
- குறிப்பு - எடுத்துக்காட்டுகள் தொல்காப்பிய உரையாசிரியர்களில் ஒருவரான இளம்பூரணர் காட்டுபவை.
பிரிநிலை எச்சம்
தொகுபிரிநிலை எச்சம், சொல்லைத் தனித்தன்மை உடையதாகப் பிரித்துக் காட்டும்.[2]
- எடுத்துக்காட்டு
- அவனே கொண்டான் - இதில் 'ஏ' இடைச்சொல் பிரிநிலை ஏகாரமாக நின்று 'அவன் மட்டுமே கொண்டான்' என்னும் பொருளைப் பிரித்துக் காட்டியது.
- அவனோ கொண்டான் - இதில் 'ஓ' இடைச்சொல் பிரிநிலை ஓகாரமாக நின்று 'அவன் மட்டுமோ கொண்டான்' என்னும் பொருளைப் பிரித்துக் காட்டியது.
காலம் மறைந்து நிற்கும் தொகைநிலைத் தொடர்களில் ஒன்றான வினைத்தொகை [3] வேறு. வினை-எச்சம் வேறு.[4] தொல்காப்பியம், வினையெச்சத்தை 'வினையெஞ்சு கிளவி' என்று குறிப்பிடுகிறது. வினைச்சொல் வரவேண்டிக் குறைந்து நிற்கும் சொல் என்பது இதன் பொருள்.
'செய்து' என்பது ஒரு வினையெச்சம். 'செய்து முடித்தான்' என்னும்போது பொருள் முற்றுப் (முழுமை) பெறுகிறது. இதில் 'முடித்தான்' என்னும் வினைமுற்றைச் 'செய்து' என்னும் எச்சம் வேண்டி (அவாவி) நிற்பதைக் காணலாம்.[5]
'செய்து முடித்தான்' என்பதில் உள்ள 'செய்து' என்னும் வினையெச்சம் இறந்த காலம் காட்டுகிறது. 'செய்ய வந்தான்' என்னும்போது செய்ய என்னும் இவ்வினையெச்சம் எதிர்காலம் காட்டிற்று. இவ்வாறு வினையெச்சங்கள் காலம் காட்டும் எச்சங்களாக அமைகின்றன.
வினையெச்சமானது வினைமுற்றைக் கொண்டும், வினைக்குறிப்பைக் கொண்டும் முடியும்.[6]
- செய்ய வந்தான் - இது வினைமுற்றைக் கொண்டு முடிந்தது.
- செய்து முடித்தல், செய்து முடித்தவன், செய்ய வந்தவன் - இவை வினைக்குறிப்பைக் கொண்டு முடிந்தன.
- 'வா' என அழைத்தான். இதில் என என்பது 'என என் எச்சம்'.[7]
- வினையெச்சம் காலம் மயங்கியும் வரும். 'ஞாயிறு பட வந்தான்.'- இதில் பட [8] என்னும் எதிர்கால வினையெச்சம் பட்டு [9] வந்தான் என்னும் பொருள் தந்து நிற்பதைக் காணலாம்.[10]
தொல்காப்பியம், பெயரெச்சத்தைப் 'பெயர்-எஞ்சு கிளவி<no wiki/>' எனக் குறிப்பிடுகிறது. இது பெயரைக் கொண்டு முடியும்.[11].
உண்ட சாத்தன். - இதில் 'உண்ட' என்பது இறந்தகாலம் காட்டி வந்த பெயரெச்சம்.
உண்ணும் சாத்தன் - இதில் 'உண்ணும்' என்பது நிகழ்காலம் காட்டி வந்த பெயரெச்சம்.
வினைத்தொகை என்று கூறப்படும் காலம் கரந்த பெயரெச்சத்தை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.
ஒழியிசை எச்சம்
தொகுஒழியிசை எச்சம் என்பது ஒழித்துக் கட்டும் பொருளைக் கொண்டு தன் கருத்தை முற்றுப்பெறச் செய்துகொள்ளும்.[12]
எடுத்துக்காட்டு
- இதில் வருபவை ஒவ்வொன்றும் ஒருவகைப் பொருள்-எச்சம். சொல்-எச்சம் அன்று.
- மன்
- கூரியதோர் வாள்மன். - இதில் 'மன்' என்பது ஒழியிசை. ஒழியிசை என்பது ஒழித்துக் கட்டுதலை உணர்த்தும் இசை.
- இந்த வாள் ஒழித்துக் கட்டும் என்னும் பொருளை 'மன்' என்னும் சொல் உணர்த்தி-நின்றது.
- தில்
- வருகதில் அம்ம - இதில் 'தில்' என்னும் இடைச்சொல் 'வரட்டும், வந்ததும் ஒழித்துக் கட்டுவேன்' என்னும் பொருளை எச்சமாகக் கொண்டு முற்றுப்பெறுவதைக் காணலாம்.
- ஓ
- கொளலோ கொண்டான் - இதில் 'ஓ' என்னும் இடைச்சொல் 'கொள்வது மட்டுமா செய்தான், கொடுப்பதும் செய்தான்' என்னும் எச்சப்பொருளை உணர்த்திக்கொண்டு முற்றுப்பெறுவதைக் காணலாம்.
எதிர்மறை எச்சம்
தொகுஎதிர்மறை-எச்சம் எச்சமானது எதிர்மறைப் பொருளை உணர்த்தித் தன் கருத்தை முற்றுவித்துக் கொள்ளும்.[13]
இதுவும் ஒருவகைப் பொருள்-எச்சம். சொல்-எச்சம் அன்று.
எடுத்துக்காட்டு - யானோ கொண்டேன் - இதில் யானோ என்பதில் உள்ள 'ஓ' என்னும் எதிர்மறை இடைச்சொல் 'யான் கொள்ளவில்லை' என்னும் பொருளை உணர்த்திக்கொண்டு முற்றுப்பெறுவதைக் காணலாம்.
உம்மை எச்சம்
தொகுஉம்மை என்பது 'உம்' என்னும் இடைச்சொல். இது பல பொருள்களைத் தழுவிக்கொண்டு நிற்கும். 'பாலும் பழமும் உண்டான்' என்னும்பொது 'பால் உண்டான்', 'பழம் உண்டான்' என்று பொருள் தந்து நிற்பதைக் காணலாம். இவ்வாறு 'உம்' இணைந்த அனைத்துச் சொல்மீதும் முற்றுவினை இணைந்து உம்மைப் பொருள் முற்றுப்பெறும்.[14]
உம் இடைச்சொல் ஒரே ஒரு சொல்லோடு மட்டும் வரும்போது மற்றொன்றையும் தழுவிக்கொண்டு முற்றுப்பெறும்.
சோறும் உண்டான் - இந்த வாக்கியத்தில் உம் இடைச்சொல் ஒரு பொருளில் மட்டும் வந்துள்ளது. எனினும் அது 'முன்பு கூழ் உண்டான், இப்போது சோறும் உண்டான்' என்பது போன்ற முன்பு நிகழ்ந்த ஒன்றையும் தழுவிக்கொண்டு பொருள் முற்றுப்பெற்றுள்ளது. இதுவும் ஒருவகை எச்சம். கருத்துப்பொருள் எஞ்சிநிற்கும் எச்சம் இது.[15]
என எச்சம்
தொகு'என' என்னும் எச்சம் வினையைக் கொண்டு முடியும்.[16]
எடுத்துக்காட்டு - வருக என வரவேற்றான். இதில் என என்னும் எச்சம் வரவேற்றான் என்னும் வினையைக் கொண்டு முற்றுப்பெற்றுள்ளது.
அன்றியும் கொள் எனக் கொடுத்தான் என்னும்போது வாங்கும் ப.க்கம் இல்லாத ஒருவனை வற்புறுத்திக் கொள் எனக் கொடுத்தான் என்னும் பொருள்-நிலையும் எச்சமாகி நின்றது.
எஞ்சிய மூன்று எச்சங்கள்
தொகுகீழ்க்காணும் எஞ்சிய மூன்று எச்சங்களும் சொல்லோ, சொல்லோடு தொடர்புடைய பொருளோ எஞ்சி-நின்று முடிவன அல்ல.[17] அவை தம் தம் குறிப்பால் பொருளை உணர்த்தும் [18]
சொல் எச்சம்
தொகுசொல்லெச்சம் என்பது கூறப்படும் வாக்கியத்தில் ஓரிரு சொல் மறைந்து நின்று பொருள் உணர்த்துவது. எ-டு: "பசிக்கிறது; சோறு கொடு" இதில் "எனக்கு" "அதனால்" ஆகிய சொற்கள் மறைந்து நிற்கிறன (எனக்குப் பசிக்கிறது; அதனால் சோறுகொடு)
குறிப்பு எச்சம்
தொகுகுறிப்பு-எச்சம் என்பது சொற்கள் உணர்த்தாததைக் குறிப்பாக உணர்த்துவது.எ-டு: தவறு செய்தவனை "நீ செய்தது நன்றாக இருக்கிறது" என ஏளனம் தொனிக்கக் கூறுவது குறிப்பெச்சம். இங்கு "நன்று" என்ற சொல் "நன்றன்று" என்ற குறிப்புப் பொருள் உணர்த்துகிறது.
இசை எச்சம்
தொகுஇசை-எச்சம் என்பது இசைவான மற்றொரு பொருளை உணர்த்தும் எச்சம். இதனை நன்னூல் "ஒருமொழி ஒழி தன் இனம் கொளற்கு உரித்தே" என்று குறிப்பிடுகிறது [19]
ஆயிரம் மக்கள் பொருதனர் - என்னும்போது மக்கள் என்னும் சொல் பெண்பாலாரை விலக்கி ஆண்பாலாரை மட்டும் குறிப்பால் உணர்த்தி எஞ்சி நிற்கிறது.
அவள் மகனைப் பெற்றபோது நால்வர் உடனிருந்தனர் - என்னும்போது நால்வர் என்னும் சொல் ஆண்பாலாரை விலக்கிப் பெண்பாலாரை மட்டும் உணர்த்தி நிற்கிறது.
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை
எதிர்மறை உம்மை எனவே சொல்லே
குறிப்பே இசையே ஆயீரைந்தும்
நெறிப்படத் தோன்றும் எஞ்சுபொருட் கிளவி (தொல்காப்பியம் எச்ச-இயல் 34) - ↑ அவற்றுள்
பிரிநிலை எச்சம் பிரிநிலை முடிபின. (தொல்காப்பியம் எச்ச-இயல் 35) - ↑ வினையின் தொகுதி காலத்து இயலும். (தொல்காப்பியம் எச்சவியல் 19)
- ↑ வினைத்தொகையில் உள்ள வினையானது பெயரைத் தழுவும். வினையெச்சத்தில் வினையானது வினைமுற்றைத் தழுவும்.
- ↑ இதுபோலப் பெயரெச்சம் பெயரை அவாவி நிற்கும்
- ↑ வினையெஞ்சுகிளவிக்கு வினையும் குறிப்பும்
நினையத் தோன்றிய முடிபு ஆகும்மே
ஆவயின் குறிப்பே ஆக்கமொடு வருமே. (தொல்காப்பியம் எச்சவியல் 36) - ↑ என என் எச்சம் வினையொடு முடிமே. (தொல்காப்பியம் எச்சவியல் 42)
- ↑ தோன்ற
- ↑ தோன்றி
- ↑ வினையெஞ்சுகிளவியும் வேறு பல் குறிய. (தொல்காப்பியம் எச்சவியல் 61)
- ↑ பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே - தொல்காப்பியம் எச்ச-இயல் 37
- ↑ ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின (தொல்காப்பியம் எச்ச-இயல் 37)
- ↑ எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின (தொல்காப்பியம், எச்சவியல் 39)
- ↑ உம்மை எச்சம் இரு ஈற்றானும்
தன்வினை ஒன்றிய முடிபு ஆகும்மே (தொல்காப்பியம், எச்சவியல் 40) - ↑ தன்மேல் செஞ்சொல் வரூஉம் காலை
நுகழும் காலமொடு வாராக் காலமும்
இறந்த காலமொடு வாராக் காலமும்
மயங்குதல் வரையார் முறைநிலை யான (தொல்காப்பியம், எச்சவியல் 41) - ↑ என என் எச்சம் வினையொடு முடிமே (தொல்காப்பியம் எச்சவியல் 42)
- ↑ எஞ்சிய மூன்றும் மேல்வந்து முடிக்கும்
எஞ்சு பொருள்-கிளவி இல் என மொழிப (தொல்காப்பியம் எச்சவியல் 43) - ↑ அவைதாம்
தத்தம் குறிப்பின் எச்சம் செப்பும் (தொல்காப்பியம் எச்சவியல் 44) - ↑ நன்னூல் 358 உரை