இரும்புக் காலம்

(இரும்புக்காலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இரும்புக் காலம் (ஆங்கிலம்: Iron age) என்பது, மனிதப் பண்பாட்டு வளர்ச்சியின் ஒரு காலகட்டம் ஆகும். இக்காலகட்டத்திலே இரும்புக் கருவிகளினதும், ஆயுதங்களினதும் பயன்பாடு முன்னணியில் இருக்கும். சிலசமூகங்களில், இரும்பின் அறிமுகமும், மாறுபட்ட வேளாண்மைச் செயல் முறைகள், சமய நம்பிக்கைகள், அழகியல் பாணிகள் போன்ற மாற்றங்களும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தன. ஆனாலும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்பதில்லை.

Dun Carloway broch, லெவிசு, சுகாட்டுலாந்து
ஒரு இரும்புக்கால வேயப்பட்ட கூரை. அம்பிசயர், ஐக்கிய இராச்சியம்.

வரலாற்றுக்கு முந்திய சமூகங்களை வகைப்படுத்தும் முக்கால முறையில் இறுதியான முக்கிய கால கட்டம் இதுவாகும். இது வெண்கலக் காலத்தைத் தொடர்ந்து நிலவியது. இது நிலவிய நாடு, புவியியல் பிரதேசம் ஆகியவற்றைப் பொறுத்து இதன் காலமும், சூழலும் மாறுபட்டன. பண்டைய அண்மைக் கிழக்கு, கிரேக்கம், பண்டைய இந்தியா ஆகிய இடங்களில் இரும்புக் காலம் கி.மு. 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது.5,300 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் இருந்தது.கி.மு. 3345லேயே, தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் இரும்பு அறிமுகமாகி விட்டது.[1] இரும்பை உருக்குதல், அதனைக் கருவிகள் தயாரிப்பதற்கேற்ப உருவாக்குதல் என்பவற்றை உள்ளடக்கிய இரும்பின் பயன்பாடு, ஆபிரிக்காவின் நொக் (Nok) பண்பாட்டில், கி.மு 1200 அளவில் தோன்றியது. ஐரோப்பாவின் பிற பகுதிகளில் இது மிகவும் பிந்திய காலத்திலேயே தொடங்கியது. இரும்புக் காலப் பண்பாடு, மத்திய ஐரோப்பாவில் கி.மு. 8 ஆம் நூற்றாண்டிலும், வட ஐரோப்பாவில் கி.மு 6 ஆம் நூற்றாண்டிலும் தோற்றம் பெற்றது. மத்திய தரைக் கடற் பகுதிகளில், கிரேக்க, உரோமப் பேரரசுக் காலத்தில் உருவான வரலாற்று மரபுகளுடனும், இந்தியாவில், பௌத்தம், சமணம் ஆகியவற்றின் எழுச்சியுடனும், சீனாவில் கன்பூசியனிசத்தின் தோற்றத்துடனும் இரும்புக்காலம் முடிவுக்கு வந்தது. வட ஐரோப்பியப் பகுதிகளில் இது மத்திய காலத் தொடக்கப் பகுதி வரை நீடித்தது.

வரலாறு

தொகு

இரும்புக்காலத்தை பின்வருமாறு வகை பிரிப்பர். அவை,

  1. வெண்கலக் காலம் வழக்கிழந்த பகுதியும் இரும்புக் காலம் தொடங்கிய பகுதியும் (கி.மு. 1400 முதல் கி.மு. 1300 வரை)
  2. செம்மையான இரும்புக் காலம் (கி.மு. 1300 முதல் கி.பி. 500 வரை)
    1. பழைய இரும்புக்காலம் (கி.மு. 1300 முதல் கி.மு. 475 வரை)
    2. மத்திய இரும்புக்காலம் (கி.மு. 475 முதல் கி.பி. 250 வரை)
    3. புதிய இரும்புக்காலம் (கி.பி. 250 முதல் கி.பி. 500 வரை)

இரும்புக்காலத்தின் போது தரமிக்கக் கருவிகளையும் ஆயுதங்களையும் உருவாக்க எஃகு பயன்படுத்தப்பட்டது. இவை இரும்பும் கரிமமும் சேர்ந்த கலவையாக தயாரிக்கப்பட்டன. கரிமத்தின் அளவு கருவியின் எடையில் 0.3 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதம் வரை கலக்கப்பட்டது. எஃகை விட குறைந்த கரிம அளவு கொண்ட தேனிரும்புக் கருவிகள் தயாரிக்கப்பட்டாலும் அவை குறைந்த அளவு கடினத்தன்மையுள்ள கருவிகளுக்காகவே பயன்படுத்தப்பட்டது. எஃகை கடினப்படுத்தும் முறை மத்திய தரைகடல் பகுதிகளிலும் ஆப்ரிக்கப் பகுதிகளிலும் பெரிதளவு மாறுபட்டிருந்தன. சில பகுதிகளில் ஆயுதங்கள் மொத்தமாக கரிமம் சேர்த்து எஃகால் ஆக்கப்பட்டது. மற்ற பகுதிகளில் ஆயுதங்களின் வெளிப்பகுதியோ அல்லது கூர்மையான பகுதியோ மட்டுமே தேவைக்கேற்ப கரிமம் சேர்த்து எஃகால் ஆக்கப்பட்டது.

அண்மைய கிழக்குப் பகுதிகள்

தொகு

அண்மைய கிழக்குப் பகுதிகளான மத்திய கிழக்காசியாவிலும் தென்மேற்கு ஆசியாவிலும் இரும்பின் பயன்பாடுகள் வழக்கமான இரும்பின் பயன்பாட்டுக்காலமான கி.மு. 2,000க்கு முற்பட்டும் காணப்படுகின்றன. அவற்றில் சாலடியா மற்றும் அசிரியா பகுதிகளில் கிமு. 4000 ஆண்டுகளிலும் அனட்டோலியப் பகுதிகளில் கி.மு. 2500களிலும் இரும்பின் பயன்பாடு அரிதாகக் காணப்படுகின்றது. ஆனால் பரவலான இரும்பின் பயன்பாடு கி.மு. 2,000 ஆண்டின் பிற்பகுதியிலேயே காணப்படுகின்றது.

இரும்புப் பயன்பாட்டின் அளவுகள்
எளிய உலோகங்களுக்கான பண்டைய எடுத்துக்காடுகளும் பயன்பாடுகளும்.[2]
காலம் கிரீட் ஈகன் கிரேக்கம் சைப்ரசு மொத்தம் அனடோலியா அனைத்தும் சேர்த்து
கி.மு. 1300–1200 5 2 9 0 16 33 49
கி.மு. 1200–1100 1 2 8 26 37 தரவில்லை 37
கி.மு. 1100–1000 13 3 31 33 80 தரவில்லை 80
கி.மு. 1000–900 37+ 30 115 29 211 தரவில்லை 211
வெண்கலக் காலத்தின் மொத்த பயன்பாடுகள் 5 2 9 0 16 33 49
இரும்புக் காலத்தின் மொத்த பயன்பாடுகள் 51 35 163 88 328 தரவில்லை 328

 

 

வட இந்தியாவும் தக்காணமும்

தொகு

வட இந்தியாவிலும் தக்காணத்திலும் உலோகவியல் கி.மு. இரண்டாயிரமாது ஆண்டுகளிலேயே தோன்றிவிட்டது. மல்கர், தாதாபூர், உத்திர பிரதேசத்தின் லாகூர்தேவா போன்ற இடங்களில் இரும்புக்காலம் கி.மு. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. பதிரெண்டாம் நூற்றாண்டு வரை ஆரம்பமாகிரது. ஆந்திர பிரதேசத்தின் ஐதராபாத்து நகரில் காணப்படும் இரும்புகளின் காலம் கி.மு. பதிமூன்றாம் நூற்றாண்டு அளவுக்கு பழமையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

பண்டைய தமிழகமும் இலங்கையும்

தொகு

பொதுவாக தமிழகத்திலும் இலங்கையிலும் இரும்பின் தோற்றம் கி.மு. ஆயிரமாவது ஆண்டுகளை ஒட்டியே கணிக்கப்படுகின்றன. சென்னையில் உள்ள தேசியக் கடலாய்வு நிறுவனத்தைச் சார்ந்த பத்ரி நாராயணன், சசிசேகரன், இராசவேலு போன்றவர்கள் ஆதிச்சநல்லூர் பகுதியில் மின்னழுத்தத் தடுப்புக்கள ஆய்வுகளை (Electro-resistivity survey) மேற்கொண்டனர். அதன் மூலம் உலோகங்கள் இப்பகுதியில் எந்தளவு உபயோகப் படுத்தப்பட்டுளது என்பதை அறியலாம். இம்மின்னழுத்த ஆய்வில் கிடைத்த இரும்பு பொருட்களை அறிஞர்கள் குறைந்தது பொ.மு. பத்தாம் நூற்றாண்டு அளவில் உபயோகப் படுத்தப்பட்டவை என்றும் இவற்றின் பழமை கி.மு. 17 ஆம் நூற்றாண்டு அளவு கூட செல்லும் என்றும் கணித்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தின் இரும்புக்காலத்தை கி.மு. 2000 அளவு மாற்றியமைக்க வேண்டியுள்ளது.

தமிழகத்தைப் போலவே இலங்கையிலும் இரும்பின் தோற்றம் கி.மு. ஆயிரமாவது ஆண்டுகளை ஒட்டியே கணிக்கப்படுகின்றன. அனுராதபுரத்திலும் சிகிரியா மலையிலும் கிடைத்த தொல்பொருட்கள் கரிம எண் காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டதோடு அல்லாமல் இவற்றின் காலம் அதிகபட்சமாக கி.மு. எட்டாம் நூற்றாண்டு பழமை வரை எடுத்துச் செல்லப்படுகிறது. இவற்றை ஒத்த பழமையான தளங்கள் கந்தரோடை, மாதோட்டம், திசமகரமை போன்ற இடங்களிலும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கிழக்காசியா

தொகு

பண்டைய கிழக்காசிய நாடுகளில் இரும்புக்காலம் சீனம், கொரியா, சப்பான் என்ற வழியில் பயணிக்கிறது. சீனாவின் இரும்புக்காலம் கி.மு. ஒன்பதாம் நூற்றான்டிலேயே தொடங்குகிறது. இங்கு காணப்படும் பெரும் முத்திரையின் எழுத்துக்கள் கி.மு. எட்டாம் நூற்றாண்டினதாகவும் யாங்கு சீ பகுதியில் காணப்படும் இரும்புப் பொருட்கள் கி.மு. ஆறாம் நூற்ற்றாண்டு அளவில் பழமையானதாகவும் கணிக்கப்படுகின்றன.

கொரியாவின் மஞ்சள் கடல் பகுதியில் இரும்புக்காலம் கி.மு. நாலாம் நூற்றாண்டிலும், சப்பானில் யாயோய் ஆட்சிக்காலத்தின் போதும் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை) இரும்புக்காலம் ஆரம்பமானது.

தமிழகத்தில் இரும்பு கால நாகரீகம்

தொகு

தமிழ்நாட்டில் ஏனைய நாடுகளைப்போல் புதிய கற்காலத்திற்குப் பிறகு, செம்புக்காலம் அல்லது வெண்கலக் காலம் உருவாகவில்லை. மாறாக, இரும்புக் காலமே தோன்றியதென்பது புவியியலாளர்களின் கருத்தாக உள்ளது. 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பை பிரித்தெடுக்கும்-இரும்பை உருக்கும் அறிவை தமிழர் பெற்றிருந்தனர்.[3] புதிய கற்காலத்தில், மட்பாண்டங்கள் செய்வதற்காக மக்கள் மண்ணைத் தோண்டி, அவற்றில் உருவாக்கிய மட்பாண்டங்களைச் சூளையில் சுட்டபோது தற்செயலாக இரும்பைக் கண்டுபிடித்தாகவும் சொல்லப்படுகிறது. இரும்புக் காலக் கருவிகள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர் தவிர, சென்னைக்கு அருகிலுள்ள பெரம்பூர், கோயம்புத்தூர் மாவட்டம், கேரள மாநிலத்தின் மலபாரிலுள்ள தலைச்சேரி போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஆதிச்சநல்லூரில் மனித உடம்பின் முழு எலும்புக்கூடுகள், நேர்த்தியும் வழவழப்பும் மிக்க மட்பாண்டங்கள், பொன் அணிகலன்கள், வெண்கலத்தால் செய்யப்பட்ட பொருள்கள், இரும்பு ஆயுதங்கள், சிறிய வேல்கள், அரிசி, உமி முதலான பொருட்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.[4] இரும்புக்காலத்தில் இறந்தவர்களுக்கு ஈம அடையாளங்கள் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய ஈம அடையாளங்கள் பெருங்கற்படைச் சின்னங்கள் என்று வழங்கப்படுகின்றன. ஆனால், பெருங்கற்படைச் சின்னங்கள், இரும்புக் காலத்திற்குப் பிறகு வரலாற்றுத் தொடக்கக் காலத்திலும் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரும்புக்கால ஈம அடையாளங்கள் வரலாற்றுத் தொடக்கக் கால ஈமச் சின்னங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றன. கொடுமணல் ஒரு வரலாற்றுத் தொடக்கக்கால ஈம அடையாள இடமாகும். வரலாற்றுத் தொடக்கக் கால ஈம அடையாளங்களில் உரோமானிய அல்லது பிற இந்திய நாணயங்களும், இரசக் கலவை பூசப்பட்டு ஓவியம் வரையப்பட்ட பானை வகைகளும் காணப்படுகின்றன.[5] மக்கள் நிலையான வாழ்க்கையைத் தொடக்கி, வேளாண் தொழிலை மேற்கொண்ட பின்னரே பெரும் கற்புதைவுகள் ஏற்பட்டிருக்க வேண்டும். மலைச் சரிவுகளிலும் மேட்டு நிலங்களிலும் காணப்படும் புதைகுழிகள் மனித உடலை வைப்பதற்காக மட்டுமின்றி இறந்தவர்களின் ஈம அடையாளமாக உருவாக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இக்காலத்து மக்கள் கற்கருவிகளைக் கைவிட்டு இரும்புக் கருவிகளைக் கையாண்டிருந்தனர்.[4] செம்புக் கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலம் இரும்புக் காலம் எனப்படுகிறது. வேத இலக்கியத்தில் இரும்பு குறித்து அதிகம் கூறப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் இரும்புக் காலமும் பெருங்கற் காலமும் சமகாலம் எனக் கருதப்பட்டு வருகிறது. பெருங்கல் எனப்படுவது கல்லறையின் மேல் சுற்றி அடுக்கப்படும் கற்களைக் குறிப்பிடுகின்றது. அத்தகைய கல்லறைகள் தென்னிந்தியாவில் பெருமளவில் காணப்படுகின்றன. கருநாடகத்திலுள்ள அல்லூர், மாசிகி, ஆந்திரத்திலுள்ள நாகார்சுனக் கொண்டா போன்ற இடங்களில் கல்லறைக் குழிகளில் கருப்பு, சிவப்பு நிறப் பானையோடுகள், இரும்பாலான மண்வெட்டி, அரிவாள், வேறுசில சிறிய ஆயுதங்கள் ஆகியன கிடைக்கப்பெற்றன.[6]

இரும்புக் காலமும் சங்க காலமும்

தொகு

கி.மு.500 தொடங்கி கி.பி.300 வரைக்குமான சற்றேறக்குறைய 800 ஆண்டு காலத்திய தமிழகத்தின் வரலாற்றினை இரும்புக்காலம் என்று தொல்லியலாரும், சங்க காலம் என்று இலக்கிய திறனாய்வாளர்களும் கணக்கிட்டுள்ளனர். இக்கால கட்டத்தின் வரலாற்றினை அறிய மூன்று வெவ்வேறு சான்றுகள் உபயோகப்படுகின்றன. அவை: (1) தொல்லியல் பொருட்கள் (2) செம்மொழி இலக்கியங்கள், குறிப்பாக எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் (3) பழந்தமிழ்க் கல்வெட்டுகள். இவற்றோடு பானையோட்டு எழுத்துக் கீறல்களும் கணக்கில் கொள்ளப்படும். இவ்வகைச் சான்றுகளை உருவாக்குவதற்கு இரும்புக்கருவிகள் பெரிதும் உதவியிருக்கக்கூடும். அக்காலத்து மக்கள் பானையோட்டுக் கீறல்களை இரும்புக்கருவியைக் கொண்டே உருவாக்கியிருப்பர். அதே போன்று, இரும்பினாலான எழுத்தாணியைக் கொண்டே செம்மொழியிலக்கியங்களை ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இவற்றைப் படிப்பறிவுகொண்ட சிலர் செய்திருக்க வேண்டும். இது ஒருவகையான தொழில்நுட்பமாகும். வரலாற்றில் ஒரு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்போது ஒரு கருத்தியலும் உருவாக்கப்படுகிறது. கல்வி, கருத்தியல், தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையனவாகும். எப்போதும் தொழில்நுட்பம் மக்களிடையே ஒரு பிளவினைத் தோற்றுவிக்கும். அங்கு அதிகாரம் உருவாகும். அதிகாரம் படைத்த அறிவுடையவர்கள் தொழில்நுட்பத்தினைக் கையாண்டு வரலாற்றில் நிலையான சான்றுகளை உருவாக்க விரும்புவர். மேற்குறிப்பிடப்பெறும் சான்றுகள் அவ்வாறு தோன்றியிருக்ககூடும். இச்சான்றுகளிடையே தொடர்பும், தொடர்ச்சியும் இருப்பதை அறியமுடிகிறது. காட்டாக, செம்மொழியிலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல சொற்கள் மற்றும் பெயர்கள் கல்வெட்டுகளிலும் எழுதப்பட்டுள்ளன.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாடு இருந்ததா?". bbc tamil. 23 சனவரி 2025.
  2. "Alex Webb, "Metalworking in Ancient Greece"". Archived from the original on 2007-12-01. பார்க்கப்பட்ட நாள் 2013-06-06.
  3. இரும்பின் தொன்மை தமிழ்நாட்டில் அண்மைக்கால கதிரியக்கக் காலக்கணக்கீடுகள் [ANTIQUITY OF IRON: RECENT RADIOMETRIC DATES FROM TAMIL NADU]. சென்னை: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. 23 Jan 2025. p. 50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-819778428-6. {{cite book}}: line feed character in |title= at position 17 (help)
  4. 4.0 4.1 அ. இராமசாமி (2010). தமிழ்நாட்டு வரலாறு. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட், சென்னை-98. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788123416311.
  5. "இரும்புக்காலம்". பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2017.
  6. வரலாறு பதினொன்றாம் வகுப்பு. தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்விஇயல் பணிகள் நிறுவனம், சென்னை - 6. 2016. pp. ப. 12.
  7. "இரும்புக்காலமும் சங்க இலக்கியமும்". பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2017.
"https://ta.wiki.x.io/w/index.php?title=இரும்புக்_காலம்&oldid=4196635" இலிருந்து மீள்விக்கப்பட்டது