இந்தித் திணிப்பு

இந்தியைப் பயன்படுத்த கட்டாயப் படுத்துதல்

இந்தித் திணிப்பு (Hindi imposition) என்பது மொழி மேலாதிக்கத்தின் ஒரு வடிவமாகும். இதில் இந்தியை பிராந்திய மொழியாக கொண்டிராத அல்லது பயன்படுத்த விரும்பாத இந்திய மாநிலங்களில் இந்தியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற அழுத்தம் உருவாக்கப்படுகிறது. இந்தச் சொல் தமிழ்நாட்டின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் வேரூன்றியது. மதராஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் இந்தி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டபோது அது ஒரு சிக்கலாக மாறியது. [1]

இந்திய குடியரசின் அலுவல் மொழியாக இந்தி ஆக்கபட்டதில் இருந்து நவீன இந்தி திணிப்பு பற்றிய திட்டம் உருவானது. மேலும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக விளங்கும் என்றும் அதன் பின்னர் இந்தி மொழி மட்டுமே அரசுப்பணிகளில் பயன்படுத்தப்படும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. – அது நடக்கவில்லை. [2]

பின்னணி

தொகு
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் இந்தி மற்றும் இந்தி அல்லாத மொழி பேசும் பகுதிகள்
இந்தி பேசும் மாநிலங்கள்
இந்தி பேசும் மாவட்டங்கள் என்று கூறப்படுபவை
உண்மையில் இந்தி அதிகம் பேசும் மக்கள் வசிக்கும் மாவட்டங்கள்

1951 ஆம் ஆண்டில் இந்தியாவில், சுமார் 1,652 மொழிகள், தாய்மொழிகளாகப் பயன்படுத்தப்பட்டன, நாட்டின் சுமார் 450 மில்லியன் மக்கள் அதாவது மொத்த தொகையில் 87% பேர் 14 வெவ்வேறு மொழிகளில் ஒன்றைப் பேசினர். இந்திய மக்கள்தொகையில் சுமார் 30% பேர் இந்தி பேசிவந்தனர். அந்த நேரத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு இந்தியாவில் பல மொழிகள் இருப்பதன் காரணமாக ஒரு இணைப்பு மொழி இருப்பது அவசியமானது என்று கருதினார். இந்தியும் உருதுவும் கலந்த இந்துஸ்தானி என்ற மொழியே இணைப்பு மொழியாக்க தகுந்தது என்று அவர் பரிந்துரைத்தார். ஏனெனில் அது கற்றுக்கொள்வதற்கு எளிதானதானதாகவும், ஏற்கனவே பல மக்களால் பேசப்படுவதாகவும், மேலும் இந்து, முஸ்லீம் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்குவதாகவும் இருக்கும் என்று கருதப்பட்டது. அதேசமயம் மில்லியன் கணக்கான மக்களுக்கு வெளிநாட்டு மொழியான ஆங்கிலத்தைக் கற்பிப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாக ஆங்கிலம் சாத்தியமானதாக இருக்காது என்று கருதப்பட்டது. எனவே, இந்திய அரசியலமைப்பு, இந்தி மற்றும் ஆங்கிலத்தை இணை அதிகாரப்பூர்வ மொழிகளாக ஆக்கியது. ஆங்கிலம் 15 ஆண்டுகளுக்குள் படிப்படியாக இணைப்பு மொழி என்ற நிலையிலிருந்து அகற்றப்படும் என்று கூறப்பட்டது. [3]

இந்திய அரசியலமைப்புச் சட்டமும் இந்தியைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.அதற்காக மும்மொழிக் கொள்கை வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இத்திட்டத்தில், மாணவர்களின் முதல் மொழியாக அவர்களின் தாய் மொழியும், இரண்டாம் மொழியாக இந்தியும், மூன்றாம் மொழியாக ஆங்கிலமும் இருக்கும். இந்தி மொழி பேசுபவர்கள் இரண்டு மொழிகளை மட்டுமே கற்றால் போதும் என்ற சலுகை கொண்டதாகவும், அதேசமயம் மற்றவர்கள் மூன்று அல்லது நான்கு மொழிகளைக் கற்க வேண்டிய சுமையுடன் அவதிப்படவேண்டி இருப்பவர்களாக இருந்தனர். இந்தியின் பல்வேறு கிளைமொழிகளை ஒரே மொழியில் உள்வாங்கிக் கொள்வதன் மூலம் பேச்சு மொழியாக எளிமைப்படுத்த வேண்டும் மேலும் கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கு ஒரே எழுத்து முறையை உருவாக்கவேண்டும் என்றும் நேரு பரிந்துரைத்தார். [3] [4] அண்மைய முன்னேற்றங்களில், எட்டு வடகிழக்கு மாநிலங்களிலும் 10 ஆம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமாக்கும் முடிவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். புதுதில்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. "இந்தியாவின் மொழி"யாக இந்தி முக்கியத்துவம் பெறவேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தினார். மேலும் ஆங்கிலத்திற்கு மாற்றாக மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பு மொழியாக இ்ந்தி இருக்கவேண்டும் என்றார். தேசிய ஒற்றுமையைக் கட்டமைப்பதில் இந்தியைக் கொண்டு இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அமித் ஷா கூறினார். இந்த முயற்சிக்கு ஆதரவாக, வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் 22,000 இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டதை அமித் ஷா குறிப்பிட்டார். மேலும் ஒன்பது பழங்குடி சமூகங்கள் தங்கள் மொழிகளின் எழுத்துகளுக்கு தேவநாகரி எழுத்துக்களை ஏற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை எடுத்துரைத்தார். [5]

எனினும், இந்த திட்டம் வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளது. இந்தித் திணிப்பால் பிராந்தியத்தின் மொழியியல் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு அடையாளங்களின் அடிப்படையைத் தகர்ப்பதாக உள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். பூர்வீக சமூகங்களின் குறிப்பிடத்தக்க பண்பாட்டு மற்றும் வரலாற்று பிணைப்பைக் கொண்ட உள்ளூர் மொழிகளைப் பாதுகாத்து அவற்றை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த எதிர்ப்பு, 1965 இல் நடந்த சென்னை மாநிலத்தில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் போன்ற நிகழ்வுகளால் விளக்கப்படுகிறது. இத்தகைய எதிர்ப்புகள் நாட்டின் மொழிக் கொள்கையில் செல்வாக்கு செலுத்தியுள்ளன, மொழி அரசியலின் சிக்கல்களையும் மொழியியல் பன்முகத்தன்மையை மதிக்கக்கூடியதாக உள்ள மொழிக் கொள்கைகளின் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.

1965 ஆம் ஆண்டு சென்னை மாநில இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்த டங்கன் பி. ஃபாரெஸ்டரின் ஆய்வின்படி, அரசியல் போராட்டங்கள் இந்தியாவில் மொழிக் கொள்கையில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. மொழிக் கொள்கையை வகுப்பதில் மொழியியல் பன்முகத்தன்மை மற்றும் சமூக உணர்வுகளைக் கருத்தில் கொள்வது அவசியம் என்பதை இந்தப் போராட்டம் கவனத்திற்குக் கொண்டு வந்தது. [6]

வாதங்கள்

தொகு
 
கருநாடகத்தின் பெங்களூருவில் 14 செப்டம்பர் 2019 அன்று இந்தி நாள் கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடியவர்கள்.

நவீன இந்தித் திணிப்பு ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தப்படுகிறது, பலர் இந்தியை இந்தியாவின் ஒற்றை மொழியாக பயன்படுத்துவதை பல்வேறு வாதங்கள் கூறி ஆதரிக்கின்றனர், மற்றவர்கள் இந்த செயலை எதிர்க்கிறனர். [7] இந்தித் திணிப்பை நியாயப்படுத்த ஒரே நாடு, ஒரே மொழி என்ற சொல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. [8] இந்து தேசியவாதிகள் "இந்தி-இந்து-இந்துஸ்தான்" என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகின்றனர், [9] [10] [11] மேலும் சமசுகிருதமயமாக்கப்பட்ட இந்தி மொழியை திணிப்பதை ஆதரித்து வருகின்றனர். [12] [11]

ஓர்மைப்படுத்துதல்

தொகு

இந்தி மொழியை தேசிய மொழியாகப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களை ஒன்றிணைக்க முடியும் என்றும், இந்தியாவிற்குள் அதிகாரப்பூர்வ தொடர்பு ஊடகமாகப் இந்தியைப் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இரண்டு வெவ்வேறு மொழிகளை (ஆங்கிலம், இந்தி) அலுவல் மொழிகளாகப் பயன்படுத்துவது தேவையற்றது என்றும், அதற்குப் பதிலாக ஒன்றை மட்டுமே (ஆங்கிலம்) பயன்படுத்த வேண்டும் என்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். [3] [13]

ஓர்மைப்படுத்துதலுக்கு எதிரான வாதங்கள்

தொகு

இந்தியை ஓர்மைப்படுத்தும் மொழியாக மேம்படுத்தும் திட்டத்தினால் நடத்தப்படும் மொழி திணிப்பானது குறிப்பிடத்தக்க விவாதத்துக்கும், சர்ச்சைக்கும் உட்பட்ட ஒரு சிக்கலாகும். பல்வேறு ஆய்வுகளும், பகுப்பாய்வுகளும் இந்த பிரச்சனையைச் சுற்றியுள்ள சிக்கல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

ஜான் ஜே. வாட்டர் மற்றும் ரோனோஜாய் சென் ஆகியோரின் ஆய்வு நூலாக, 2019 இல் வெளியிடப்பட்ட, "தி திரிலாங்வேஜ் பார்முலா ரிவைஸ்டு: 'இந்தி இம்போசிசன் ஸ்டோக்ஸ் போராடஸ்ட்" என்ற தலைப்பிலான நூலில், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க கற்பிக்க பரிந்துரைத்த 2019 வரைவு தேசிய கல்விக் கொள்கை வெளியீடு குறித்து நூலாசிரியர்கள் விவாதித்துள்ளனர். அதில் இந்தக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன, குறிப்பாக தென்னிந்தியாவில், இது 'இந்தித் திணிப்பு' என்று கருதப்பட்டது. இந்த ஆய்வு இந்த பிரச்சினையைச் சார்ந்த சர்ச்சைகளையும், இந்தியாவில் மொழிப் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு அடையாளத்தில் செலுத்தும் தாக்கங்களையும் எடுத்துக்காட்டுகிறனர். [14]

மேலும், "லாங்வேஜ் இன்போர்ஸ்மெண்ட் இன் இண்டியா: பிரெஜுடியூஸ் நேசனலிசம்" என்ற பெயரில் லூக் ரிம்மோ லெகோ எழுதிய ஒரு ஆய்வறிக்கையில், இந்தியாவை ஒர்மைப்படுத்தும் ஒரு மொழியாக இந்தியைக் கருதி அதை அலுவல் நோக்கங்களுக்காகவும், பள்ளிகளிலும் கட்டாயப் படுத்தும் வரலாற்று சூழலையும் அதன் விளைவுகளையும் ஆராய்கிறது. இந்தச் செயல்களால் பெரும்பாலும் சிறுபான்மை மொழிகளும், அவற்றின் பண்பாடுகளும் ஓரங்கட்டப்பட்டுள்ளன. இது மொழியியல் மேலாதிக்கம் என்று கருதப்பட்டு எதிர்ப்புகளுக்கு காரணமாயிற்று என்று லீகோ குறிப்பிடுகிறார். இந்தியாவில் மொழியியல் பன்முகத்தன்மையை மதித்து, கல்வி அமைப்பில் அனைத்து மொழிகளுக்கும் சமமான ஆதரவை வழங்குவதை உறுதி செய்வதை உள்ளடக்கிய அணுகுமுறையை இந்தக் கட்டுரை கோருகிறது. [15]

கூடுதலாக, 2021 இல் குவார்ட்ஸ் வெளியிட்ட "இந்தியாவின் இந்து வலதுசாரிகள் உருது மொழியை ஏன் இவ்வளவு வெறுக்கிறார்கள்?" என்ற கட்டுரை, இந்தியாவில் உள்ள சில பிரிவினர், குறிப்பாக இந்து வலதுசாரிகள் உருது மொழிக்கு எதிராகக் கொண்டுள்ள வெறுப்பைப் பற்றி விவாதிக்கிறது. உருது மீதான இந்த வெறுப்பு, இந்தியாவில் சமய மற்றும் மொழிச் சமூகங்களுக்கு இடையிலான பதட்டங்கள் உட்பட பரந்த அரசியல் மற்றும் பண்பாட்டு இயக்கவியலுடன் இணைந்ததாக உள்ளது. [16]

தாக்கம்

தொகு

இந்தித் திணிப்பை நடைமுறைப்படுத்த அரசியல்வாதிகள் எடுக்கும் முயற்சிகள் ஊடகங்களால் விமர்சிக்கப்படுகின்றன. அரசியல்வாதிகள் இந்தி பேசாத மக்களை அவர்களின் சொந்த நாட்டிற்குள்ளேயே இரண்டாம் தர குடிமக்களாக கருதுவதாக கூறப்படுகிறது. [17]

இந்தி திணிப்பு முயற்சிகளை எதிர்த்து, தமிழ்நாட்டின் சேலத்தில் 85 வயது விவசாயி ஒருவர் கல்வியில் இந்தியைக் கட்டாயப்படுத்துவது மாணவர்களுக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி, தற்கொலை செய்து கொண்டார். [18]

பரிந்துரைக்கப்பட்ட தீர்வு

தொகு

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், கேரள முதல்வர் பிணறாயி விஜயன் ஆகியோர் அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளையும் சமமாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாகக் ஒன்றிய அரசு சம்பந்தப்பட்ட தேர்வுகளுக்கான வினாத்தாள்களை அனைத்து மொழிகளிலும் தயாரிக்க வேண்டும் என்று விஜயன் கோரியுள்ளார். அதே நேரத்தில் ஸ்டாலின் அனைத்து மொழிகளையும் ஊக்குவிக்கவும், அனைத்து மொழியினருக்கும் சமமான கல்வி, வேலை வாய்ப்புகளை அளிக்க இந்திய அரசை வலியுறுத்தியுள்ளார். [2]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Venkatachalapathy, A. R. (1995). "Dravidian Movement and Saivites: 1927-1944". Economic and Political Weekly 30 (14): 761–768. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-9976. https://www.jstor.org/stable/4402599. பார்த்த நாள்: 2023-08-20. 
  2. 2.0 2.1 "Explained | Hindi imposition and its discontents" (in en-IN). The Hindu. 2022-10-17. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X இம் மூலத்தில் இருந்து 2023-07-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230702162810/https://www.thehindu.com/news/national/explained-hindi-imposition-and-its-discontents/article66023522.ece. 
  3. 3.0 3.1 3.2 Agrawala, S.K. (1977). "Jawaharlal Nehru and the Language Problem". Journal of the Indian Law Institute 19 (1): 44–67. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-5731. https://www.jstor.org/stable/43950462. பார்த்த நாள்: 2023-08-21. 
  4. Forrester, Duncan B. (1966). "The Madras Anti-Hindi Agitation, 1965: Political Protest and its Effects on Language Policy in India". Pacific Affairs 39 (1/2): 19–36. doi:10.2307/2755179. பன்னாட்டுத் தர தொடர் எண்:0030-851X. https://www.jstor.org/stable/2755179. பார்த்த நாள்: 2023-08-21. 
  5. "Hindi should be accepted as an alternative to English, says Amit Shah". Scroll.in. பார்க்கப்பட்ட நாள் 2024-04-12.
  6. "Explained: The staunch opposition in the Northeast against Centre's proposal to make Hindi compulsory in schools". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 2024-04-12.
  7. "Hindi, the New Hindutva Weapon of Polarisation". The Wire. Archived from the original on 2023-08-21. பார்க்கப்பட்ட நாள் 2023-08-21.
  8. Agarwal, Ayush (2022-06-04). "SubscriberWrites: The answer to 'one language' in India is not imposition of Hindi, but acceptance of diversity". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2023-08-21. பார்க்கப்பட்ட நாள் 2023-08-21.
  9. "'A threat to unity': anger over push to make Hindi national language of India". The Guardian. https://www.theguardian.com/world/2022/dec/25/threat-unity-anger-over-push-make-hindi-national-language-of-india. 
  10. "A new kind of discordance". The Hindu. https://www.thehindu.com/opinion/editorial/A-new-kind-of-discordance/article16812293.ece. 
  11. 11.0 11.1 "A yen for Sanskritised Hindi". The Hindu. https://www.thehindu.com/news/national/A-yen-for-Sanskritised-Hindi/article60435857.ece. 
  12. "Why does India's Hindu right-wing hate the Urdu language so much?". Quartz (in ஆங்கிலம்). 2021-10-26. பார்க்கப்பட்ட நாள் 2023-10-29.
  13. "Should Hindi be imposed in the country? Language experts debate". The Indian Express (in ஆங்கிலம்). 2020-09-14. Archived from the original on 2023-08-21. பார்க்கப்பட்ட நாள் 2023-08-21.
  14. "ISAS Briefs 703: The Three Language Formula Revisited: 'Hindi Imposition' Stokes Protests" (PDF). 2019. பார்க்கப்பட்ட நாள் 2024-04-12.
  15. Luke Lego. "Language Enforcement in India" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2024-04-12.
  16. "Why does India's Hindu right-wing hate the Urdu language so much?". Quartz (in ஆங்கிலம்). 2021-10-26. பார்க்கப்பட்ட நாள் 2023-10-29.
  17. "Uphold India's unity, don't force another language war through Hindi imposition: Stalin". The Indian Express (in ஆங்கிலம்). 2022-10-11. Archived from the original on 2023-08-21. பார்க்கப்பட்ட நாள் 2023-08-21.
  18. "Protesting 'Hindi imposition', 85-year-old farmer sets himself on fire outside DMK office". India Today (in ஆங்கிலம்). Archived from the original on 2023-08-21. பார்க்கப்பட்ட நாள் 2023-08-21.
"https://ta.wiki.x.io/w/index.php?title=இந்தித்_திணிப்பு&oldid=4199570" இலிருந்து மீள்விக்கப்பட்டது